நாயகியை முன்னிலைப்படுத்தும் பல படங்களில் நயன்தாரா நாளை மறுநாள் வெளியாக இருக்கும் “அறம்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், இந்தத் திரைப்படம், சமூக அவலங்கள் குறித்து பேசுகிறது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் நடிகர் பழனி பட்டாளம் பேசும்போது, “தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை திரைப்படத்தல் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கோபி.. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிகன், அவருடன் நடித்தது என் பாக்கியம்…” என்றார் பழனி பட்டாளம்.
நடிகரும், இயக்குநருமான ஈ.ராம்தாஸ், “தற்போதைய சூழ்நிலையில் அவசியான படம் இது. படத்தைப் பார்க்கும் ரசிகர்களின் மனதை இந்த ‘அறம்’ கனக்க செய்யும் படம். படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் சாட்டையடியாக இருக்கும். கோபி பெரிய புரட்சிகர இயக்குநராக வருவார்…” என்றார் நெகிழ்ந்துபோய்.
படத்தின் இயக்குநரான கோபி நைனார் பேசும்போது, “இந்த படத்துக்கு முன்பு, எனக்கு துயரமான காலகட்டம். அப்போது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிக்கையாளர்கள்தான். அதனால்தான் இந்த மிகப் பெரிய பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இயக்குநர் சற்குணம்தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின் நயன்தாராவுக்கு கதை சொன்னேன்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது.
கதை ஓகே ஆன பிறகுகூட இந்த படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும் நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து இந்த படத்தை முடிக்க துணையாக நின்றார்.
இந்த படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் என்னை போலவே சமூக அக்கறை இருந்தது, அதனால்தான் எல்லோரும் இந்த படத்துக்குள் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்றுதான் முடிவெடுத்திருந்தோம். படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, ‘நிச்சயம் படம் வெற்றி பெறும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும்வரை நான் உங்கள் உடன் இருப்பேன்…’ என்றார். இது என்னை நெகிழ வைத்த்து.
எங்களை போன்ற கலைஞர்களை பத்திரிக்கையாளர்கள் நீங்கள்தான் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற வேண்டும்…” என்றார் உருக்கத்துடன்.
நல்ல மனசுக்காரர்தான் நயன்!