தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு ஒரு வியாதி உண்டு. சமகாலத்தில் நடக்கும் சமூக அநீதிகள் அல்லது நிகழ்வுகளைக் கதையாக்குவதை மிகக் கவனமாகத் தவிர்த்து விடுவது. அவர்களைப் பொறுத்தளவில் சமூக அக்கிரமம் என்றால் லஞ்சம், ஊழல், அவ்வளவுதான். அப்படியே அதைத் தாண்டினால் விவசாயத்தைக் காப்பது, கார்ப்ரேட் கம்பெனிகளை எதிர்ப்பது, அரசாங்கம் விளைவிக்கும் பொது அராஜகங்களைப் பேசுவது- தோ.. இப்போ ஜிஎஸ்டி பற்றி பேசினார்களே.._ அது போல ’ நோகாமல்’ அரசியல் பேசுவது.
ஆனால், ’விழித்திரு’ படத்தில் மீரா கதிரவன் பேசியிருக்கும் அரசியல் மிகத் துணிச்சலானது. யாரும் எளிதில் தொடத் தயங்குவது. அப்படிப்பட்ட ஒரு விஷயத்தைத் துணிந்து பேசியதற்காகவே மீரா கதிரவனுக்கு ஒரு சல்யூட்.
அப்படி ஒன்றும் இந்த நாட்டில் இல்லாத, நடக்காத புதுமாதிரியான வேற்று கிரக விஷயத்தை எல்லாம் அவர் சொல்லிவிடவில்லை. இந்தியாவில், தங்க தமிழ் நாட்டில் சம காலத்தில் நம் கண்முன்னே நடந்த ஒரு நிகழ்வுதான். சாதியப் படுகொலை.
எவ்வளவு துணிசலாகப் பொய் பேசுகிறான் என்பார்கள் ஊரில். ஆனால், இங்கு உண்மையைப் பேசத்தான் துணிய வேண்டியுள்ளது. அந்த உண்மையையும் ஜாடை மாடையாகவோ, பூசி மொழுக்கமலோ நேரடியாக சடாரென பேசுகிறது ’விழித்திரு’
அந்த வகையில் இது மிக முக்கியமான படம்.
கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு நவம்பர் மாதத்தில், தருமபுரியில் இளவரசன்- திவ்யாவின் தனிப்பட்ட காதல் விவகாரத்திற்காக தலித் மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சாதிய வன்முறை வெறியாட்டத்தால் அவர்கள் வீடுகளையும் பணம் நகைகளையும் சான்றிதழ்களையும் இழந்ததும், அவர்கள் ஆதரவற்று நின்றதும், பிறகு இளவரசன் கொல்லப்பட்டதும் இவையெல்லாம்….. அரை நிமிஷத்திற்கொரு முறை ’ப்ரேக்கிங் நியூஸ்’ பார்த்துப் பழகி விட்ட நமக்கு நினைவிலிருக்கச் சாத்தியமில்லை.
ஆனால், ’விழித்திரு’ படத்தின் கதை அந்த சம்பவத்திலிருந்துதான் தொடங்குகிறது.
அந்த சம்பவம் ஒரு தொலைக்காட்சிச் செய்தியின் வழியாகச் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நான்கு வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.
ஒன்று, வேலை தேடி வெளி நாடு போகவிருக்கும் கிருஷ்ணாவின் கதை.
இரண்டு, பிக்பாக்கெட் திருடர்களான விதார்த்- தன்ஷிகா மற்றும் தம்பி ராமையாவின் கதை
மூன்று, பணக்கார பசங்களான விக்ரம் – கிறிஸ்டினாவின் கதை
நான்கு, தொலைந்து போன தனது நாய்க்குட்டியைத் தேடியலையும் வெங்கட் பிரபு மற்றும் அவரது மகள் சாரா
இந்த நான்கு கதைகளும் எப்படியான ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றன என்பதை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இப்படிப்பட்ட கதைகளுக்கு விறுவிறுப்பாகவும் சுவாரசியமானதாகவுமான திரைக்கதை முக்கியம். எல்லா கதைகளுக்குமே திரைக்கதை முக்கியம்தான் என்றாலும் ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பாத்திரங்கள் ஒரு புள்ளிக்கு எப்படி வந்து சேர்வார்கள் என்கிற இவ்வகைக் கதைகளில் பார்வையாளனின் எதிர்பார்ப்பை அதிகமாக்குவது என்பது இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு.
அண்மையில் வெளியான ’மாநகரம்’ திரைப்படத்தின் திரைக்கதை நினைவிருக்கிறதா? ஏறத்தாழ இதே போன்றதொரு திரைக்கதை தான். சென்னை மாநகரில் ஒரே இரவில் நடப்பது போன்ற கதை மிகுந்த சுவாரசியமாக படமாக்கப்பட்டிருந்தது. ( சென்னை குறித்த அவருடைய ஒவ்வாமை துருத்திக் கொண்டு தெரிந்தாலும்) ’விழித்திரு’வில் நான்கு கதைகளையும் தனித்தனியாக சொல்லி பார்வையாளர்களின் கவனத்தைக் குவிக்க வைக்க சற்று நேரம் எடுத்தாலும் பிற்பாடு விறுவிறுப்பு கூடுகிறது.
ஊடகவியலாளரான சரண் சுடப்பட்டதும் படம் வேகமெடுக்கிறது. கிருஷ்ணா துரத்தப்படுகிறார். படம் முழுக்க அதிகார வர்க்கம் அவரைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அதிகார வர்க்கத்தினரால் துரத்தப்படும் அடித்தட்டு இளைஞனின் பாத்திரத்திற்கு அழகாகப் பொறுந்திப் போகிறார் கிருஷ்ணா. உண்மையில் அவர் இந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஆச்சரியத்திற்க்குரியது. இந்த படத்தில் அவர் நடித்துள்ள முத்துகுமார் என்கிற பாத்திரம், இறுதிக் கட்டத்தில் ’தமிழ் நாடே பரிதாபப்பட்ட’ ஒரு உண்மையான நபரை நினைவு படுத்தும் விதமாக இருக்கிறது. இம்மாதிரியான பாத்திரங்களில் நடிக்க ஓரளவு அறிமுகமான நடிகர்கள் அவ்வளவு எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு ’ஹீரோ’ ஏற்க மறுக்கக் கூடிய ஏதிலி பாத்திரம் அது. ஆனால், கிருஷ்ணா ஒத்துழைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
பிக்பாக்கெட் திருடர்களாக வரும் விதார்த்தும் தன்ஷிகாவும் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றனர். ’குற்றமே தண்டனை’, ’ஒரு கிடாவின் கருணை மனு’ வரிசையில் இதிலும் விதார்த் அசத்துகிறார். தம்பி ராமையாவுக்கு வழக்கம் போல் ’வேலைக்கு ஆகாதவன்’ வேலைதான் என்றாலும் தனது அங்க சேஷ்டையால் கவர முயற்சிக்கிறார்.
பணக்கார ஜோடிகளாக வரும் விக்ரம்- கிறிஸ்டினா பாத்திரங்கள் கதைக்கு அப்பாற்பட்டு ’யூத்’ ஆடியன்சை மனதில் வைத்து எழுதிருந்தாலும் சுவாரசியமாவே இருக்கின்றன. இருவரும் மிகச் சிறப்பாக பொறுந்துகின்றனர். இருவரின் உடல் மொழியும் மாடுலேஷனும் ஒரு பக்கா மேல்தட்டு. குறிப்பாக, விக்ரம் தன்னுடைய ஒரே அடையாளமான ’பணக்கார’த்தனத்தை ஒவ்வொரு இடத்திலும் அடையாளப்படுத்துவது நன்றாகவே இருக்கிறது.
மனிதர்கள் தாங்கள் யாரோ ஒரு செல்வாக்குள்ள மனிதரின் உறவாகவோ, நட்பாகவோ, அல்லக்கையாவோ தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் மனநிலைதான் அது. ஆனால், அந்த செல்வாக்கு எல்லா நேரத்திலும் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது என்கிற நிதர்சனத்தை விக்ரம் உணரும் இடமான – ஒரு பிச்சைக் காரனிடமே பிச்சையா- என்கிற காட்சி அட்டகாசம். படத்தின் சுவாரசியமான காட்சிகளில் அதுவும் ஒன்று. இறுதியில் இருவரும் பிரிந்து போகும் காட்சி கவித்துவமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறுமியும் அவளுடைய பார்வையற்ற அப்பாவும் தங்களது செல்ல நாய்க்குட்டியைத் தேடி நகரம் முழுக்க அலைவது சற்றே மிகையாகத் தோன்றினாலும் பதைப் பதைப்பூட்டுகிறது. விளையாட்டுத் தனமாகவே அறியப்பட்ட வெங்கட் பிரபுவை இப்படியொரு சீரியசான பாத்திரத்தில் பார்ப்பது புதுசாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. அவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதை வெறுமனே சொல்வதோடு நிற்காமல், ஓரிடத்தில் அதைப் பயன்படுத்தியிருப்பதும் சிறப்பு. பார்வையற்ற வெ.பிரபுவும் கருப்பு கண்ணாடியெல்லாம் போட்டு சமாளிக்காமல் முடிந்த வரை நன்றாக நடித்துள்ளார். ஒருவேளை அவருடைய முதல் படமான ’உன்னைச் சரணடைந்தேன்’ வரவேற்பைப் பெற்றிருந்தால் இம்மாதிரியான ஒரு நல்ல நடிகராக வந்திருப்பாரோ என்னவோ.
இரவு நேர சென்னை பலதரப்பட்ட மனிதர்களையும் நமக்கு அறிமுகப்படுத்திச் செல்கிறது. பாலியல் தொழிலாளிகள், வழிப்பறிகள், குழந்தைக் கடத்தல்காரர்கள் , உதவும் மனப்பான்மையுள்ள மனிதர்கள்.. இப்படியாக.
ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டனும் ஆர்.வி சரனும் இரவு வெளிச்சத்தில் சென்னையை அழகாகக் காட்சிபடுத்தியுள்ளனர். துரத்தல் காட்சிகளில் நம்மையும் சேர்த்தே துரத்துவது போன்று படமாக்கியுள்ளார்கள்.
சத்யன் மஹாலிங்கத்தின் ( வசூல் ராஜாவில்’ கலக்கப் போவது யாரு, என்கிற பாடலை கமலுடன் இணைந்து பாடியவர்) பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு துணை செய்கிறது. ஒரு பாடலில் டி.ராஜேந்தரை கவர்ச்சி நடனம் ஆடிப் பாட வைத்துள்ளார்கள்.
நான்கு கதைகளையும் கச்சிதமாகவும் அளவாகவும் தொகுத்துள்ளார் எடிட்டர் பிரவீன்.
பாத்திரங்களின் வலுவான பின்னணிக் கதைகள் மற்றும். பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ள வைக்கின்ற வலுவான எமோஷனல் பகுதிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தின் மையமே, ஒரு ஊடகவியலாளரின் கொலையும் அதைப் பார்த்து விட்ட ஒரு ஏழை இளைஞனும்தான் என்கிற போது அந்த பாத்திரங்களுக்கான பின்னணிக் கதைகளை வலுவாகச் சொல்லியிருக்கலாம். குறிப்பாக கிருஷ்ணாவின் பாத்திர வடிவமைப்பு. அவருடைய ஏழ்மையும் உறவுகளும் குறித்து வலுவாகச் சொல்லப்பட்டிருந்தால் அந்த பாத்திரத்தின் மீது இன்னும் நமக்கு கரிசனம் ஏற்பட்டிருக்கும். க்ளைமேக்சில் பர்ஸில் காட்டப்படும் அந்த அம்மா தங்கை புகைப்படம் ஏற்படுத்தும் வலியை முதலிலேயே காட்டி நகர்த்தியிருக்கலாம்.
அதே போல எஸ்.பி.பி. சரணின் பாத்திரம். அதுவும் இன்னும் வலுவாக காட்டப்பட்டிருக்க வேண்டும். இன்னொன்று போலிஸ் காரர்களை எல்லாம் தீமையின் உருவமாக போகிற போக்கில் காட்டி விட்டுப் போய்விட முடியும். நம்புவார்கள். ஆனால், ஷோல்டரை நிமித்தி நிற்கும் ஒரு நேர்மையான ஊடகவியலாளன் என்பதை சட்டென நம்புவது கொஞ்சம் கஷ்டம். (முக்கியமாக அதுவொரு துணைப் பாத்திரம் என்னும் போது இன்னும் கஷ்டம்.) நம்மூர் ஊடகங்கள், ஊடகவிலாளர்களின் லட்சணம் அப்படி. எதையெல்லாம் செய்தியாக்குவது என்பது குறித்த பாரபட்சம் அவர்களுக்குண்டு. ஒரிரு நாட்களுக்கு முன்பு ஒரு நேரலை விவாததில், ஊடகங்களின் இந்த பாரபட்சம் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார் கவிஞர் மனுஷ்ய புத்திரன். மை காட்.. அவரும் கூட இந்த படத்தில் ஒரு காட்சியில் இருக்கிறார். அவர் மட்டுமல்ல திருமுருகன் காந்தி, கருப்பு கருணா என்று சமூகத் தளத்தில் செயல்படுகின்ற சிலரும் கூட இந்த படத்தில் பங்களித்துள்ளனர்.
படத்தின் போக்கில் இயல்பாக இருக்கும் வசனங்கள் . “ எல்லாருக்குமே கண்ணு தெரியாதுதான்… எனக்கு தூரத்துல இருப்பது தெரியாது…உனக்கு பக்கத்துல இருப்பது தெரியாது அவ்வளவுதான்” என ஒரு பெரியவர் சொல்லும் தன்னம்பிக்கை வசனமிருக்கும் அதே சமயம், “ ”இருக்கிற ஒரே ப்ளக் பாய்ண்ட்ல சார்ஜ் ஏறிட்டிருக்கு” போன்ற ’மீனிங்’ வசனமும் இருக்கிறது.
இயக்குனர் மீரா கதிரவன்.
முதல் படத்தில் விழுந்தவர்கள் எழுந்து வருவது மிகக் கடினம். அப்படி எழுந்து வரும் போது பாதுகாப்பான ஒரு கதையைத் தான் தேர்வு செய்வார்கள். அதுவும் தானே தயாரிப்பாளராகவும் இருக்கும் போது ரிஸ்க் எடுக்க துணிய மாட்டார்கள். அப்படியிருக்கையில் எந்த தைரியத்தில், நம்பிக்கையில் இப்படி ஒரு சாதிய படுகொலையை மையப்படுத்திய கதையினை தேர்ந்தெடுத்தார் என்பது வியப்பாக இருகிறது.
தமிழ்த் திரைப்படங்களில் சமூக அக்கறை பேசும் காலம் இது. அப்படி பேசினால் சமூக அக்கறையாளர்கள் நம்மை ’அலேக்’காகத் தூக்கிப் போய் பீடத்தில் அமர்த்தி விடுவார்கள் என்கிற அசாத்தியமான நம்பிக்கையா? அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகளைச் சொன்னால் அந்த மக்கள் நம்மை பாதுகாப்பார்கள் என்கிற நம்பிக்கையா? தெரியவில்லை.
கடந்த வருடம் ’மாவீரன் கிட்டு’ என்றொரு படம் வெளியானது. அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் மிகத் தீவிரமாகப் பேசப்பட்டிருந்தது. ஆனால், யாரும் சீந்தவில்லை. ஆதிக்க சாதிப் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட உடுமலைப் பேட்டை சங்கர் குறித்து சமீபத்தில் வந்த “ மகளிர் மட்டும்‘ படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது சிறிதாக இருந்தாலும் முக்கியமானதில்லையா.? அதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.( நான் வணிகத்தை சொல்லவில்லை. குறைந்த பட்சம் ஒரு விவாதம்..அங்கிகாரம்.)
இந்த நிலையில் ”நாந்தான் அந்த பையனை வெட்டி தண்டவாளத்தில் போட்டேன்” என்று வெளிப்படையாக வசனம் வைத்துள்ள மீரா கதிரவனுக்கு தலித் விடுதலை பேசுபவர்கள், தலித் ஆதரவாளர்கள் என்ன மாதிரியான அங்கிகாரத்தை அளிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
’விழித்திரு’ திரைப்படம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்கள் பாராட்டிப் பேசியதை ஒரு காணொளியில் பார்த்தேன். அவருக்குப் படம் பிடித்திருந்ததாகச் சொல்லியுள்ளார். அப்படியெனில் அவருடைய கட்சிக்காரர்கள் இதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பார்களா? குறைந்த பட்சம் அவர்களாவது தியேட்டருக்குப் போய் பார்ப்பார்களா? அப்படி ஆதரவு அளித்தால் மட்டுமே மீரா கதிரவன் போன்றவர்களைப் பாதுகாக்க முடியு,ம்.
இல்லை.. அண்ணல் அம்பேத்கர் விசாவுக்காகக் காத்திருந்ததைப் போல, நாங்கள் வெறொரு அதிசயத்திற்காக காத்திருக்கிறோம் என்று வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தால், அவர்களின் பாவனைத்தனம். அம்பலப்பட வாய்ப்பிருக்கிறது. அவ்ளோதான்.
ம்ம்… மறந்து விட்டேன். படத்தின் இறுதியில் கிருஷ்ணாவின் பாத்திரம், தமிழகமே பரிதாபப்பட்ட ஒரு உண்மை நபரை நினைவூட்டுகிறது என்று சொன்னேன் அல்லவா?
ராம்குமார். நினைவிருக்கிறதா?
நமக்கு எதுதான் நினைவிலிருக்கும்?
விமர்சனம்: அதீதன் திருவாசகம்