தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வரும் நடிகர் கமல்ஹாசன், “ஆனந்தவிடகன்” வாழ இதழில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டார். “தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் மெல்ல ஊடுருவி திராவிட பண்பாட்டை பலவீனப்படுத்துவதை பார்க்க முடிகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று பினராயி கேட்டிருந்தார்.
அதற்கு கமல் விரிவாக பதில் அளித்தார்.
“இத்தகைய இந்து வலது சாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால் இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கி விட்டனர்.
அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். ‘எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவால் இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.
இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற ஒரு நமபிக்கை நம் அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கி விடும்.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
“இந்து தீவிரவாதம்” என்று கமல் குறிப்பிட்டிருந்ததற்கு பா.ஜ.க., உள்ளிட்ட பல இந்து ஆதரவு அமைப்புகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் அனந்த கிருஷ்ணன் பஷிராஜன் என்ற பதிவர் முகநூலில் எழுதியுள்ளதாவது.
“கமலிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒன்றுமில்லாததை வேண்டுமென்றே பெரிது படுத்துகிறார்கள் என்றார். நான் தீவிரவாதம் (extremism) என்றுதான் எழுதியிருக்கிறேனே தவிர பயங்கரவாதம் (terrorism) என்று எழுதவில்லை என்றார். நான் இதைப் பற்றி ஒரு விளக்கம் கொடுக்கலாமே என்றேன். விளக்கம் கொடுத்தால் அதற்கும் வியாக்கியானம் செய்யத் துவங்கி விடுவார்கள் என்றார்.
இன்னும் சில நாட்களில் அவரை சில முக்கியமான தொலைக்காட்சிகள் ஆங்கிலத்தில் நேர்காணல் செய்ய இருக்கின்றன. அப்போது இந்தக் கேள்வி எழுந்தால் கண்டிப்பாக நான் என்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக்குவேன் என்றார்”
– இதையடுத்து அனந்தகிருஷ்ணனிடம் பேசினோம். அவர், “கமல் என் நண்பர். அந்த அடிப்படையில் அவரிடம் பேசினேன். தீவிரவாத்த்துக்கும் பயங்கரவாதத்துக்கும் வித்தியாசம் உண்டல்லவா.. அதைத்தான் கமல் விளக்கப்போவதாக கூறினார்” என்றார்.