கோழிக்கோடு:
கெயில் திட்டத்துக்கு எதிராகக் கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கூட்டநாடு, மங்களூரு வழியாகப் பெங்களூருக்கு எரிவாயு கொண்டுசெல்லும் திட்டத்தை, இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) செயல்படுத்த உள்ளது. இத் திட்டத்துக்காக, தமிழ்நாட்டில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக 925 கி.மீ தூரத்துக்கு எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்திவருகின்றது.
இந்தத் திட்டத்துக்காக தங்கள் நிலங்கள் வழியாகக் குழாய்கள் பதிக்க விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக, அந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் , விவசாயிகளின் தொடர் எதிர்ப்பால் திட்டம் சரிவர செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளது.
இதற்கிடையே இத் திட்டத்துக்காக கேரள மாநிலத்தன் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 80 கி.மீ நீளத்தில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கும் இத் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இன்று கோழிக்கோட்டில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், கெயில் குழாய் பதிக்க வந்த ஊழியர்களையும் போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும் வாகனங்களுக்குத் தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர், தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்த்தாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.