கடந்த பகுதியின் தொடர்ச்சி…

மெர்சல் படம் பற்றிய உங்கள் ட்விட்டில், “கமல் எட்டடி பாய்ந்தால் விஜய் நாற்பத்து எட்டடி பாய்வார்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது குறித்து ஒரு பதிவர் கேட்டபோது, சஸ்பென்ஸ் என்றீர்கள்… அதென்ன சஸ்பென்ஸ்..?

பெரிதாக சஸ்பென்ஸ் எல்லாம் ஏதுமில்லை. அபூர்வ சகோதரர்களில் கமல் குள்ளனாக மூன்றடி உயரத்தில் வருவார். ஆகவே அவர் எட்டடி பாய்ந்தால், மெர்சல் விஜய் நாற்பத்து எட்டடி பாய்வார் என்ற அர்த்தத்தில் சொல்லியிருந்தேன்.

தவிர, அபூர்வசகோதரர்கள் –  மூன்று முகமும் இரு படங்களும் கலந்ததுததான் மெர்சல். அது வெற்றி பெற ஜாலியா வாழ்த்தினேன். 

அரசியல் மட்டுமின்றி பெண்ணுரிமை சார்ந்த விசயங்கள் குறித்தும் பேசுகிறீர்கள்.  உங்களுக்கு விடுக்கப்பட்ட பாலியல் அழைப்புகள் குறித்தும் வெளிப்படையாக பேசினீர்கள்..

ஆமாம்… என்னதான் உலகம் முன்னேறிவிட்டது என்று சொல்லிக்கொண்டாலும், இன்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது எல்லா  துறைகளிலும், எல்லா மட்டத்திலும் நடக்கவே செய்கிறது.

பெண் என்றாலே வாழ்வில் பல தடைகளைக் கடந்துதான் சாதிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் நடிகை என்றால்    இரண்டு விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை.

பாலியல் சீண்டல் (Sexual Harassment),  அட்ஜஸ்ட்மென்ட் என்று இருவித  பிரச்னைகளுக்கு சில நடிகைகள் தள்ளப்படுவது வருத்தமான உண்மை.

அட்ஜஸ்ட்மென்ட்  என்பது  இருவரும்  விரும்பி செய்கிற ஒரு டீல். அதை அந்தப் பார்வையோடுதான் நோக்க வேண்டும். அது  அந்த  இருவரின் தனிப்பட்ட விருப்பம்.  இதில் கருத்துகூற பிறருக்கு உரிமை இல்லை.

பாலியல் சீண்டல் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தவிர நான் என்னைப் பற்றி மட்டும்தான் பேச முடியும்.  சினிமாவில் சில சமரசங்களைச் செய்யாததால்  சில பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன் என்பது உண்மையே.

ஆனால் சினிமாவில் இருக்கும் சமரசங்களைவிட  வெளி உலகத்தில் வக்கிரமான பார்வையை சகித்துகொண்டு வாழ்வது நடிகைகளுக்கு பெரும் சவால்.

பணம் படைத்தவர்கள்  சிலர்,   நடிகைகளை மோசமான பார்வையோடு நோக்குகிறார்கள். அப்படி சில பணம் படைத்தவர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள்  என்னை நெருங்க முயற்சி செய்தது உண்மை.  ‘நான் அப்படிப்பட்டவள் இல்லை, என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அவர்களுக்குப் புரியவைத்து விலகியிருக்கிறேன்.

நடிகைகள் என்றால் சமூகத்திலும் வித்தியாசமான பார்வை இருக்கிறதே..

எல்லாத் துறையிலும் இருக்கும் நல்லதும் கெட்டதும் திரைத்துறையிலும் இருக்கிறது. ஆகவே சமூகத்தில் நிலவும் அந்த “பொதுப்புத்தி” பார்வை தவறானது.

சினிமா நட்சத்திரங்களின் படுக்கையறைக் காட்சிகளை அறிந்துகொள்ளத்தான்  பலரும்  ஆர்வப்படுகிறார்கள்.  நடிகைகளும் பெண் தான். அவர்களுக்கும் மனது – உணர்வு என்று இருக்கிறது. ஆகவே நடிகையை நடிகையாக மட்டுமே பார்க்க வேண்டும்.

இதில் ஊடகங்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. அதை அவர்கள் உணரவேண்டும். தேவையற்ற கிசுகிசு செய்திகள் நடிக – நடிகையர் மீது பொது மக்களுக்கு வித்தியாசமான பார்வையை ஏற்படுத்துகின்றன. இதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற  கிசுகிசு செய்திகளை நான் புறக்கணித்துவிடுகிறேன்.

பொதுப் பிரச்சினைகள் குறித்து ட்விட்டுவதுன் நின்றுவிடாமல், மேடையேறியும் பேசுகிறீர்கள், தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்துகொள்கிறீர்கள்.. அடுத்தகட்டம்?

அடுத்தகட்டம் என்று சொல்ல முடியாது. வேறு ஒரு முயற்சி என சொல்லலாம்.  

கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கு புராணங்கள், இதிகாசங்கள் குறித்து எனக்குத் தெரியும். இவற்றை குழந்தைகளுக்கு ஏற்றபடி குட்டிக் கதைகளாக சொல்லலாம் என்று இருக்கிறேன். இது அநேகமாக டிசம்பரில் துவங்கும்.

திரைப்படத்தில்…?

ஓ.. அது இல்லாமலா? இப்போது கன்னடத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில்  “உன் காதல் இருந்தா…” என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதில் இரட்டை வேடம்.

தவிர வேறு சில படங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

குழந்தைக்கு நீங்கள் பாலூட்டும் ஒளிப்படம் சமீபமாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு, மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கப்படுகிறது. இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

முதலில் அந்த படத்தைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். அமெரிக்காவில் நான் வசித்தபோது, 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் அது. அதில் இருப்பது என் மகன்தான்.

அந்த படத்தை எடுத்தவரும் ஒரு பெண் தான். மிகப்பிரபலமான புகைப்படக்காரர்.

அமெரிக்கப் பெண்கள் பலர்,  குழந்தை பெற்றுக்கொண்டால் அழகு போய்விடும், பால் கொடுத்தால் அழகு  குறைந்துவிடும் என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தவறான எண்ணத்தைப் போக்கி, தாய்மையின் சிறப்பை உணர்த்துவதற்காக ஒரு புத்தகம் போடப்பட்டது. அதில் இதே போல எண்பது தாய்மார்களின் படங்கள் இருக்கின்றன. அதில் என்னுடையதும் ஒன்று.

அது அமெரிக்க மக்களுக்காக வெளியிடப்பட்ட புத்தகமே தவிர, இங்குள்ளவர்களுக்கானது அல்ல.

ஆனால்  2016ம் ஆண்டு, யாரோ இங்கே பரப்பி விட்டார்கள். ஆனாலும் தாய்மையின் சிறப்பை உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம் என்பதை உணர்ந்து எத்தனையோ பேர் எனக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.  எத்தனையோ கணவன்மார்கள், எனக்கு பாராட்டு தெரிவித்ததோடு, என் மனைவி பேசுகிறார்கள் என்று போனைக் கொடுத்திருக்கிறார்கள். தாய்மார்களும் வாழ்த்தியிருக்கிறார்கள்.

ஆனால் சில முட்டாள்கள் இந்தப் படத்தைக்கூட  கவர்ச்சிக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பது வருத்தமான வலியான விசயம்தான்.

தாய்மையை அவமதிப்பது சொந்தத் தாயை அவமதிப்பதற்கு சமம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

சமூகவலைதளங்களில் இப்படி வக்கிரமாக எழுதப்படுவதைத் தடுக்க தீர்வு என்னவென்று நினைக்கிறீர்கள்?

ஒரு விசயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இருட்டில் நாம் எல்லோருமே அசிங்கமானவர்கள்தான். நாம் எல்லோரும் காந்தியோ விவேகானந்தரோ கிடையாது. இருட்டு.. யாருக்கும் தெரியாது என்கிற சூழலில் நமது மனதில் உள்ள அசிங்கங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதே நமது குணம்.

ஆகவே சோசியல் மீடியாவில் வெளியாகும் வக்கிரமான கமெண்ட்டுகள், படங்களை நாம் ஒழிக்கவே முடியாது.

தீர்வு..?

இது ஒரு பிரச்சினையே கிடையாது என்கிறேன். இது போன்ற துர்க்குணம் காலம் காலமாக இருக்கிறது.  செல்போன் வருவதற்கு முன்பு தொலைபேசிகளில் நம்பர் தெரியாது. அப்போது பெண் குரல் கேட்டாலே ஆபாசமாக பேசுவோர் இருந்தார்கள்.  

அதற்கும் முன்பு திண்ணைப்பேச்சு. திண்ணையில் பேசுவபவர்கள் நல்லதே பேச மாட்டார்கள்..  ஊர்வம்புதான் அவர்கள் நோக்கம். அப்போது தி்ண்ணை..  இப்போது இண்ட்டர்நெட்.

திண்ணைப்பேச்சுக்காரர்களால் எப்படி சமூகத்துக்கு எந்த பயனும் இல்லையோ, அதுபோலவே சமூகவலைதளத்தில் இப்படி பேசுபவர்களாலும் சமூகத்துக்கு எந்தவித பலனும் இல்லை.

ஆனால் இப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இவர்களைப் புறக்கணிப்பதே சரி!