சென்னை:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களை சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. வட சென்னையில் பல இடங்களால் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது. வடசென்னை பகுதியில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
அரசும் சென்னை மாநகராட்சியும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை எடுத்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், தண்ணீர் தேங்குவதை தடுக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மழை பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தாழ்வான பகுதிகளில் உள்ளோரையும், வெள்ள நீரில் சிக்கியுள்ள வர்களையும் மீட்பதற்காக சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய முகாம்களைச் சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக சென்னை & அரக்கோணம் கேம்ப் மூத்த கமாண்டோ ரேகா கூறி உள்ளார்.
மேலும், ஒரு குழுவிற்கு 45 வீரர்கள் வீதம், மீட்பு பணிகளுக்கான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளனர்.