சென்னை,
கருணாநிதி மகன் மு.க.முத்துவின் பேரன் மனோரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவும் இன்று காலை திருமணம் நடந்தது. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மிக எளிமையான முறையில் நடந்த இந்தத் திருமணத்துக்கு மிகச் சிலருக்கே அழைப்பிதழ்கள் அளிக்கப்பட்டன. திருமண வரவேற்பை விமரிசையாக நடத்த திட்டமாம்.
இன்று நடந்த திருமணத்துக்காக கோபாலபுரம் இல்லம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வீடு விழாக்கோலம் காண்கிறது என்பதால் குடும்பத்தினர் அனைவருக்கும் உற்சாகம்.
காலை சுமார் எட்டு மணிக்கு விக்ரம் மற்றும் குடும்பத்தினர் மணமகளோடு கோபாலபுரம் இல்லம் வந்தனர். திருவேற்காடு பழமலை நாதஸ்வரக் குழுவினர் அதற்கு முன்பே வந்து விட்டனர். கருணாநிதியின் வாகன நிறுத்துமிடத்தில் பெரிய விரிப்பு போடப்பட்டிருக்க நாதஸ்வரக் குழுவினர் அங்கு அமர்ந்து இசைக்க ஆரம்பித்தனர்.
கொஞ்ச நேரத்தில் மணமகன் மனோ ரஞ்சித்துடன் அவரது குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர். கருணாநிதி வழக்கம்போல மாடியில் உள்ள தனது அறையில் இருந்தார். ஒன்பதே முக்கால் மணிக்கு மு.க.அழகிரி குடும்ப சகிதமாக வந்து சேர்ந்தார். நேராக தனது தாயார் தயாளுவை சென்று பார்த்தார். பிறகு, மாடிக்குச் சென்று தந்தை கருணாநிதியை சந்தித்தார். உடன் மகன் தயாநிதி அழகிரியையும் அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கருணாநிதியின் அறையில் இருந்தவர்கள், கீழே வந்தனர்.
மு.க.ஸ்டாலின், பசும்பொன் தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின் சென்றுவிட்டார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வந்திருந்தார்.
அமிர்தம், முரசொலி செல்வம், செல்வி, தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்துசேர ஆரம்பித்தனர். கனிமொழியும் அவரது தாயார் ராஜாத்தி அம்மாளும் வந்திருந்தனர்.
பத்து மணி சுமாருக்கு மாடியில் இருந்து கீழே அழைத்துவரப்பட்டார் கருணாநிதி. அவர் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்தார். அதை மணமகள் கழுத்தில் கட்டினார் மனோ ரஞ்சித்.
பிறகு மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். திருமணத்துக்காகக் கெட்டி மேளம் ஒலித்தபோது, சற்றே திரும்பி அந்தப் பக்கம் பார்த்திருக்கிறார் கருணாநிதி. நாதசுவர இசையை கவனிக்கிறார் என்றவுடன், சக்கர நாற்காலியோடு நாதசுவர இசைக் குழுவினரின் அருகில் அழைத்துவரப்பட்டார் கருணாநிதி.
சற்று நேரம் நாதசுர இசைக் குழுவினரையே பார்த்துக்கொண்டிருந்தார் கருணாநிதி. அப்போது மாப்பிள்ளையின் அப்பா கெவின்கேர் ரங்கநாதனுக்கு இன்று பிறந்தநாள். அதை அவர் சொல்ல, மணமக்களுக்கான வாழ்த்துகளுடன்,”ஹேப்பி பர்த்டே” முழக்கமும் அங்கே உற்சாகமாய் ஒலித்தது.
பிறகு அவர் தன் மனைவியுடன் சேர்ந்து கருணாநிதியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். பிறகு கருணாநிதி அவரது (மாடி) அறைக்கு கூட்டிச் செல்லப்பட்டார். திருமணவிழா என்பதோடு, பிறந்தநாள் விழாவும் சேர்ந்துகொள்ள கோபாலபுர இல்லம் கூடுதல் உற்சாகத்தில் மிதந்தது இன்று.
தவிர, சமீபகாலமாக கருணாநிதிக்கு ஒலிகள் கேட்பதில்லை. இன்று நாதசுவர ஒலியை கவனித்துக் கேட்டார் கருணாநிதி என்பது குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருக்கிறது.