சண்டிகர்:

பஞ்சாபில் இறந்தவர்கள் 65 ஆயிரம் பேருக்கு பல ஆண்டுகளாக அரசு பென்சன் வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்த முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் 19.80 லட்சம் பேர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநில அரசு மாதந்தோறும் ரூ.500 பென்சன் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில், முதியவர்கள், விதவைகள், மாற்று திறனாளிகளுக்கு பென்சன் வழங்க மாநில அரசு ரூ.49.51 கோடி ஒதுக்கீடு செய்து வருகிறது.

முதல்வராக அம்ரீந்தர் சிங் பொறுப்பேற்றவுடன் இதில் நடந்த முறைகேடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
இதில் பென்சன் பெறுபவர்களில் 2 லட்சத்து 45 ஆயிரம் 935 பேர் பென்சன் பெற தகுதி இல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். சிலருக்கு லட்சக கணக்கில் சொத்துகள் உள்ளன. பென்சன் வாங்குபவர்களில் 65 ஆயிரத்து 743 பேர் உயிருடன் இல்லை.

45 ஆயிரத்து 128 பேர் பென்சன் பெற போலி முகவரி அளித்துள்ளனர். 42 ஆயிரத்து 437 இளைஞர்களும், 10 ஆயிரத்து 199 பணக்காரர்களும் பென்சன் வாங்கி வருகின்றனர். பென்சன் மறு ஆய்வுக்கு அழைப்பு விடுத்த போது 82 ஆயிரத்து 428 பேர் வரவில்லை.