கோவை,
கொடுத்த கடனை கேட்டதற்கு, கந்துவட்டி என்று புகார் கூறுவேன் என மிரட்டியதால் பணம் கொடுத்தவர் இன்று காலை கோவை மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் மகனுடன் தீக்குளிக்க முயன்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவர் விசைத்தறி நடத்தி வருகிறார். இவருக்ரிகு ரித்திஷ் என்ற 7 வயது மகன் உள்ளார்.
குமார் தனது மகனுடன் இன்று காலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தார். அப்போது தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து தனது மீதும், மகன் மீதும் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயற்சி செய்தார்.
அதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடமிருந்த தீப்பெட்டி மற்றும் மண்எண்ணை பாட்டிலை பிடுங்கி, அவர்ள் இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்
பின்னர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குமார் கூறியதாவது,
கடந்த 2015ம் ஆண்டு மோகன் ராஜ் என்ற தங்க வியாபாரி என்னிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் வாங்கிய பணத்தை இதுவரை திருப்பி தராமல் இழுத்தடித்து வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மோகன்ராஜை சந்தித்து பணத்தை கேட்ட போது அவர் என் மீது கந்து வட்டி புகார் கொடுத்து விடுவதாக என்னை மிரட்டினார்.
இதுகுறித்து நான் போலீசில் புகார் கூறினேன். ஆனால், அவர்கள், தற்போதுள்ள சூழலில், அவர் சொல்வதுதான் நடக்கும், நீயே அவரிடம் பேசி பணத்தை வாங்கி கொள் என்று கூறிவிட்டனர்.
எனவே, அவரிடம் இருந்து பணத்தை வாங்க வேறு வழி தெரியாததாலும், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்ததாலும் மகனுடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், தற்போது கடன் வாங்கியவர் இதை காரணம் காட்டி மிரட்டியதால், கடன் கொடுத்தவர் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.