சென்னை,

தி.மு.க. தலைவர் கருமாநிதி தீவிர அரசியலுக்கு திரும்பியவுடன் தமிழக ஆட்சி கலைவது உறுதி என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஆளும் அ.தி.மு.க.வில் தற்போது இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான அணி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது.

இவர்களுக்கு எதிராக டி.டி.வி. தலைமயில் ஒரு அணி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆளும் தரப்பை தினகரன் அணியினர் தொடர்ந்து கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார்கள். பல்வேறு குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி “தி.மு.க. தலைவர் கருமாநிதி தீவிர அரசியலுக்கு திரும்பியவுடன் தமிழக ஆட்சி கலைவது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, “கருணாநிதி ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால இந்நேரம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் திறமையான அரசியல்வாதியாக உருவாகவில்லை” என்று பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகிறார்கள். பதிலுக்கு ஸ்டாலின் ஆதரவாளர்கள், “ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் அரசியல் திறமையா” என்று கேட்டுவருகிறார்கள்.

இந்த நிலையில், தினகரன் ஆதரவாளர் புகழேந்தியின் கருத்து வேறுவித விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. “புகழேந்தி கூறுவதைப் பார்த்தால், இந்த ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு தினகரனுக்கு “திறமை” இல்லை என்பதும், போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லை என்பதும் புலனாகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.