ஜெயலலிதா சகாப்தம் ஒரு விமர்சன கண்ணோட்டம் – எச்.பீர்முஹம்மது
தமிழ்நாட்டின் அரசியல் வானம் தற்போது டிசம்பர் மாத காலநிலை போன்று இருண்டு கிடக்கிறது. சுமார் 34 ஆண்டு காலம் தமிழ்நாட்டு அரசியலில் அதிரடி நாயகியாக இருந்த ஒருவரின் மரணம் தான் அதற்கு காரணம். இத்தனை ஆண்டுகாலமாக இரு கட்சிகள் சார்ந்த இருமை நிலையாக தமிழ்நாடு இருப்பதன் காரணமாக ஏற்பட்ட விளைவு இது .
ஜெயலலிதா என்ற பிம்பம் தமிழ்நாட்டின் முந்தைய பிம்பமான எம்ஜிஆரை விட அதிக காலம் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருந்தது. இந்திய அரசியலின் எல்லா தரப்பையும் திரும்பி பார்க்க வைத்த ஒன்றாகவும் அது இருந்தது. அது சாதிய ரீதியாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது. அந்த அடையாளம் தான் அவருக்கு பல விதங்களில் தன்னை தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்த உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1987 டிசம்பர் 24 ல் எம்.ஜி.ஆர் மறைவதற்கு முந்தைய நாள் வரை அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு ஜெயலலிதா வருவார் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் அவரின் அரசியல் வாழ்க்கை சறுக்கல்களையும், உயர மேற்றல்களையும் கொண்டது.
அன்றைய மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி ஆகியோரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார் ஜெயலலிதா. (இவர் ராமநாதபுரத்தில் பிறந்ததாக வலம்புரி ஜாண் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.)
இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார்.
சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து தேர்ச்சி பெற்றார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புதுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகை யானார். கலையுலக வாழ்க்கை அவருக்கு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒன்றாக அமையவில்லை. ஆனால் அதுவே பிற்காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய ஆளுங்கட்சி ஒன்றின் தலைமை பதவியை அடையும் துருப்பு சீட்டாக மாறும் என்பதை அவர் அப்போது எதிர்பார்த்திருக்கமாட்டார். ஏன் அது பற்றிய கனவு கூட அப்போது அவரிடம் இருந்திருக்காது.
எம்.ஜி.ஆரின் மரணம் தமிழக அரசியலை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. அதாவது 1987 டிசம்பர் 24 ல் எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். 1982 ல் அதிமுகவில் அவரின் வருகை என்பது மூத்த தலைவர்களுக்கு கிலியாகவும், இளந்தலைவர்களுக்கு ஆகர்சனமாகவும் மாறியது. அன்றைய அதிமுகவின் அடித்தளம் என்பது பிம்ப கவர்ச்சியால் கட்டமைக்கப்பட்டிருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஜெயலலிதா ராஜீவ்காந்தி துணையோடு எம்.ஜி.ஆரை முந்திச் செல்ல விரும்பினார். முதலமைச்சராக கூட மாறுவதற்கு ஆசைப்பட்டார். இதன் தொடர்ச்சியில் எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் ஜெயலலிதாவை ஏன் கட்சிக்குள் கொண்டு வந்தேன் என்று புலம்பினார். அவரை கட்சியிலிருந்து நீக்கவும் முயற்சித்தார். கடைசி நேரத்தில் அந்த முயற்சி தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்கிறது. அவரின் மரண நாளில் முந்தைய உதாரணங்களின் தொடர்ச்சியாக ஜெயலலிதா பல அவமானங் களை சந்தித்தார். அவரின் உடல் அருகே நின்ற போது ஜெயலலிதாவை பலர் பிடித்து தள்ளினர். அதன் பின்னர் இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை கே.பி.ராமலிங்கமும், எம்.ஜி.ஆர் உறவினர் திலீபனும் இறக்கி விட்டனர். (இவர்களுக்கு அவ்வாறு செய்ய கட்டளை இட்ட ஆர்.எம். வீரப்பன் பின்னாளில் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக்கப்பட்டார் என்பது முரண் நகை) இது அவரின் மனதில் தீராத காயமாகவும், பழிவாங்கும் உணர்ச்சியின் தொடக்கமாகவும் மாறியது.
அப்போது ஜெயலலிதாவின் ஆதரவாளர்களாக இருந்த திருநாவுக்கரசரும், சாத்தூர் ராமச்சந்திரனும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இதன் காரணமாக ஏற்பட்ட விரக்தியிலிருந்து அவரை மீட்டு மீண்டும் அரசியல் பக்கம் கொண்டு வர நடராஜனும், சசிகலாவும் விரும்பினர். இந்த சம்பவத்தின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் அவர் மீதான அனுதாப உணர்ச்சிகளை ஏற்படுத்தியது. 27 எம்.எல்.ஏக்கள் அவரின் ஆதரவாளர்களாக மாறினர். இந்நிலையில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஆர்.எம்.வீரப்பன் முதலில் கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பினார்.
ஆனால் அதற்கு கட்சியில் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்று கருதி எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலும், ஜெயலலிதாவை இவர் சரியான முறையில் எதிர்கொள்வார் என்ற எண்ணத்திலும் ஜானகியை முதலமைச்சராக முன் மொழிந்தார். இந்நிலையில் ஜானகி அமைச்சரவை 1988 ஜனவரி 25 ல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. ஏற்கனவே 27 எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதா பக்கம் இருந்த காரணத்தால் மெஜாரிட்டியை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் ஜானகி அரசிற்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் மறுத்தது. ஆர்.எம். வீரப்பன் கடைசியில் கருணாநிதியிடம் ஆதரவு கோரி அவரை சந்தித்தார். ஆனால் கருணாநிதி ஆதரவளிக்க மறுத்தார். ஒருவேளை அந்த தருணத்தில் திமுக ஜானகி அரசிற்கு ஆதரவு கொடுத்திருந்தால் தமிழக வரலாறு வேறு மாதிரி திரும்பி இருக்கும். இதனைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக சட்டசபையில் 1988 ஆம் ஆண்டு ஜனவரி 25 ல் நடைபெற்றது. ஜெயலலிதா அணியில் 27 எம்.எல்.ஏக்களும், ஜானகி அணியில் 96 எம்.எல்.ஏக்களும் இருந்தனர். இந்நிலையில் சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன் ஜானகி அணியை ஆதரித்து ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியேற்றினார். அவர்களை பதவி நீக்கமும் செய்தார்.
இந்நிலையில் சட்டமன்றத்திற்குள் ரவுடிகள் புகுந்து ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை தாக்கத்தொடங்கினர். இதனைத்தொடர்ந்து சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக சட்டமன்றத்திற்குள் காவல்துறை புகுந்தது. அங்கு நடைபெற்ற தடியடியில் பலர் காயமடைந்தனர். இதனை காரணங்காட்டி மத்திய ராஜீவ்காந்தி அரசு ஜானகி தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்தது. இதனால் தமிழ்நாட்டில் ஒருவருடம் கவர்னர் ஆட்சி நடைபெற்றது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. ஜெ. அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 27 இடங்களை கைப்பற்றியது. ஜானகி அணிக்கு வெறும் ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஜானகி அரசியல் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் இரு அணிகளும் ஒன்றாயின. உண்மையில் ஜானகிக்கு அரசியல் ஆர்வம் இல்லை. ஆர்.எம்.வீரப்பன் தான் ஜெயலலிதாவை ஓரங்கட்ட அவரை அரசியலுக்கு கொண்டு வந்தார்.
1986 காலம் முதலே ஜெயலலிதாவின் மீது சசிகலா கணவர் நடராஜன் ஆதிக்கம் செலுத்தினார். வீடியோ நட்பானது ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர், குடும்ப நண்பர் என்ற நிலைக்கு நடராஜனை மாற்றியது. இந்நிலையில் 1989 மார்ச் 15 ம் தேதி தன் அணியில் ஏற்பட்ட குழப்பங்களால் விரக்தி ஏற்பட்டு தான் அரசியலை விட்டு விலகுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டு பத்திரிகைகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி அதனை பத்திரிகை அலுவகங்களில் கொடுக்க தன் உதவியாளரிடம் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. இதனை அறிந்து கொண்ட நடராஜன் காரில் கடிதத்துடன் சென்று கொண்டிருந்த அவரது உதவியாளரை நடுவழியில் மடக்கி அவரிடமிருந்து அந்த கடிதத்தை கைப்பற்றி தன் கைவசம் வைத்துக்கொண்டார்.
இதனை அறிந்த ஜெயலலிதா அவரின் மீது கடும் கோபங்கொண்டார். நேரில் வந்து நடராஜனுடன் சண்டை இட்டார். இதனை மோப்பம் பிடித்த உளவுத்துறை மேலிடத்திற்கு தகவல் கொடுத்தது. ஏற்கனவே ஒரு வழக்கில் நடராஜன் வீட்டை சோதனை இட உள்துறையின் அனுமதி வாங்கி இருந்த காவல்துறை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடராஜன் வீட்டை சோதனை போட்டது. இதில் ஜெயலலிதாவின் கடிதம் சிக்கியது. தன் மீதான ஜெயலலிதாவின் கோபம் திசை திரும்ப நடராஜன் தான் இந்த உத்தியை கையாண்டு காவல்துறையிடம் அந்த கடிதத்தை அளித்தார் என்பது அறியப்படாத தகவல்.
இதன் தொடர்ச்சியில் ஜெயலலிதாவின் கோபம் நடராஜனை விட்டு கருணாநிதி பக்கம் திரும்பியது. இதனை சட்டமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார் ஜெயலலிதா. அதனைத்தொடர்ந்து 1989 மார்ச் 25 ல் தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையை படிக்க தொடங்கினார். அப்போது எழுந்த ஜெயலலிதா நீ கிரிமினல் இதனை படிக்கக்கூடாது என்றார். உடனே மைக்கை அணைத்த கருணாநிதி கிரிமினல் யார் என்று சோமன் பாபுவிடம் போய் கேள் என்றார். உடனே கொதித்த ஜெயலலிதா இவனை அடியுங்கடா என்றார். உடனே ஓடிவந்த செங்கோட்டையன் கருணாநிதியின் முகத்தில் குத்தப்போய் அவரின் கண்ணாடி கீழே விழுந்தது.
இதன் காரணமாக திமுக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை அடிக்க பாய்ந்தனர். அவரின் சேலையை உருவ முயற்சித்தனர். துரைமுருகன் அதில் முன்னணியில் நின்றார். ஜெயலலிதாவை நோக்கி செருப்புகள் பறந்தன. முடிவில் தலைவிரிகோலமாக சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஜெயலலிதா. அன்று முதல் தான் கருணாநிதி முதல்வராக இருக்கும் வரை சட்டமன்றம் செல்வதில்லை என்று முடிவெடுத்தார். தான் முதலமைச்சர் ஆன பிறகு தான் சபைக்கு வருவேன் என்று சபதமும் செய்தார். பின்னர் சட்டமன்ற கட்சித்தலைவராக திருநாவுக்கரசரை தேர்ந்தெடுக்காமல் வேறு ஒருவரை தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா. இதனால் அதிருப்தியுற்ற திருநாவுக்கரசு கட்சியை கைப்பற்ற முடிவு செய்து தன் ஆதரவாளர்களுடன் கட்சி தலைமையகத்தை கைப்பற்றப்போனார்.
இதனால் அதிமுக தலைமையகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இது புகைப்படமாக பத்திரிகைகளில் வெளிவந்தது. இதனை ஒட்டி ஜெயலலிதா தான் அரசியலுக்கே முழுக்க போடுவதாக சொன்னார். இதன் விளைவாக அவரின் ஆதரவாளர்கள் இந்த முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி போயஸ்தோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர் அந்த முடிவை வாபஸ் பெற்ற ஜெயலலிதா பத்திரிகைகளில் வந்த தலைமையக தாக்குதல் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து மத்திய அரசிடம் தனக்கு அங்கீகாரம் கோரி தூது சென்றார். அந்த தருணத்தில் ஜானகியும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததன் வெளிப்பாடாக ஜெயலலிதாவிற்கு சாதகமான சூழல் நிலவியது. அப்போது ஜெயலலிதாவிற்கு முழு ஆதரவு அளித்த ராஜீவ் காந்தி அரசு தேர்தல் கமிஷன் மூலம் ஜெயலலிதா தலைமையை உண்மையான அதிமுக வாக அங்கீகரித்ததுடன், அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும் திருப்பியளித்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு தான் ஜெயலலிதாவின் எதார்த்த தமிழ்நாட்டு அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது எனலாம்.
1989 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதா 38 இடங்களில் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே வெற்றி பெற்றது. இது ஜெயலலிதாவிற்கு புது தெம்பை அளித்தது. தான் தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற அதீத தன்னம்பிக்கையையும் அவருக்கு அளித்தது. இந்நிலையில் மத்தியில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்து சந்திரசேகர் ஆட்சி வந்தது. ராஜீவ் காந்தியுடனான தொடர்பை வைத்து சந்திரசேகர் அரசிற்கு அழுத்தம் கொடுத்து திமுக ஆட்சியை கலைக்க வைத்தார் ஜெயலலிதா. சுப்ரமணிய சுவாமி மூலம் இதற்கான காய்களை நகர்த்தினார். அதன் மூலம் விரைவில் ஆட்சியை பிடிப்பது அவரின் கனவாக இருந்தது. இதன் விளைவாக 1991 ஜனவரி 31 ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒன்றாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி பிரச்சாரக் கூட்டத்தில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் ராஜீவ் அனுதாபத்தை வைத்து ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சிக்கு வந்தார்.
1991 ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் வரவு ஒருவகையில் அவரின் தனிப்பட்ட அரசியல் கணக்குகளை தீர்ப்பதாக இருந்தது. முன்னர் யார் யாரெல்லாம் தன்னை அவமானப்படுத்தி, தன் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தார்களோ அவர்கள் அத்தனை பேரையும் பழிவாங்கினார். குறிப்பாக எம்ஜிஆரின் இறுதி ஊர்வல வாகனத்திலிருந்து இறக்கி விடப்பட்ட கே.பி. ராமலிங்கம் அப்போது திமுகவில் இருந்தார். அவரை கைது செய்து சிறையில் அடைத்து காவல்துறையை ஏவி கடுமையாக தாக்க வைத்தார். அவரை ஜெயிலில் ஜட்டியுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுக்க வைத்து அதனை பார்த்து ரசித்தார். பின்னர் திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் போன்றோரை பழிவாங்கினார். சாத்தூர் ராமச்சந்திரனை காலில் விழவைத்து அந்த புகைப்படத்தை பத்திரிகையில் வெளியிட வைத்து மகிழ்ந்தார். இதன் காரணமாக அவர் திமுகவில் இணைந்தார். பின்னர் எஸ்.டி. சோமசுந்தரத்தை அவரின் வண்டியில் தொங்கிக்கொண்டு வரும் படி செய்தார். திராவிட இயக்க மூத்த தலைவர் நெடுஞ்செழியன் கூட தப்பவில்லை. அவர் பல தடவை போயஸ் தோட்டத்தில் அவமானப்பட்டிருக்கிறார். சசிகலா தான் அதற்கு காரணமாக இருந்தார்.
1991-1996 காலகட்டம் என்பது ஜெயலலிதாவிற்கு அரசியல் ரீதியான தொடக்கத்தை அளித்தாலும் அதுவே அவருக்கான இறுதி அத்தியாயத்தை எழுதுவதற்கான முக்கிய காரணியாக மாறியது. ஏற்கனவே வீடியோ கேசட் விஷயத்தில் நடராஜன் மனைவி சசிகலாவிடம் தொடர்பு உருவானது. இது தொடர்ச்சியாக நீடித்ததன் வழி 1988 முதல் போயஸ் கார்டனில் நிரந்தரமாக தங்கத்தொடங்கினார் சசிகலா. இதனோடு அவரின் உறவினர்களும் இணைந்து கொண்டனர். இவர்களின் ஆதிக்கம் அந்த காலகட்டத்தில் மிக அதிகமாக இருந்தது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தின் எல்லா விஷயங்களிலும் தலையிட்டனர். ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து குவித்தனர். அது அவர்களின் பெயரிலும், ஜெயலலிதாவின் பெயரில் வாங்கப்பட்டன. மேலும் பல தொழிலதிபர்கள் மிரட்டப்பட்டனர். அவர்களின் சொத்துகள் எல்லாம் மிரட்டி வாங்கப்பட்டன. இதனால் சிலர் தற்கொலை கூட செய்து கொண்டனர். புகழ்பெற்ற பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளர் அவர்களில் ஒருவர். பலரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஒருவரிடம் இருந்த கொடநாடு மிரட்டி வாங்கப்பட்டது. இப்படியான பலதரப்பட்ட அக்கிரமங்கள், அட்டூழியங்கள், கொடூரங்கள் காரணமாக 1996 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதாவிற்கு பலத்த அடியை கொடுத்தனர். இந்த கால கட்டத்தில் ஜெயலலிதா தன் சாதிய அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க இயலாத சக்தியாக மாற விரும்பினார். குறிப்பாக தன் அய்யங்கார் சாதிய அடையாளம் தான் இந்திய அதிகார வர்க்கம் அவர் மீது கரிசனம் கொள்ள காரணமாக இருந்தது. குறிப்பாக ராஜீவ் காந்தி காலத்திற்கு பிறகு நரசிம்மராவுடன் அவருக்கு ஏற்பட்ட பிணக்கு காரணமாக காங்கிரஸுடனான உறவை துண்டித்தார்.
ராஜீவ்காந்தியின் மரணம் ஏற்படுத்திய அனுதாபத்தால் அதிமுக ஆட்சியை கைப்பற்றவில்லை என்றார். இதன் காரணமாக அவருக்கு டெல்லி லாபியில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனை நிரப்புவதற்காக 1992 ல் அயோத்தியில் ராமர்கோவில் சம்பந்தமாக கூடிய தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றார். ராமர் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கே கட்ட முடியும்? என்றார். அதற்கு முன்பாக அத்வானியை ஜெயலலிதா சந்தித்தார். அதன் தாக்கம் தான் அவரின் இந்த நிலைபாடு. அதன் மூலம் மீண்டும் தன் பிராமண லாபியை புதுப்பித்துக்கொண்டார்.
1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிற்கு மக்கள் கொடுத்த கடுமையான அடி காரணமாக திமுக ஆட்சிக்கு வந்தது. இதன் தொடர்ச்சியில் ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 1998 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியுடன் முதன் முதலாக கூட்டணி அமைத்தார். இதில் அவருக்கு இருவித நோக்கங்கள் இருந்தன. ஒன்று இந்த தேர்தலில் பிஜேபி பெரும்பான்மை பெற வாய்ப்பிருக்கிறது. அதன் படி கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெறலாம். அதன் மூலம் ஊழல் வழக்குகளில் இருந்து விடுபடலாம். இரண்டு இழந்து போன பிராமண லாபியை புதுப்பித்தல். இதன் தொடர்ச்சியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இது அவருக்கு மிகுந்த தைரியத்தை கொடுத்தது. தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் தன்னை ஏற்றுக்கொள்வதாக நினைத்தார்.
அதன் பிறகு 2001 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தார். அதன் பிறகு கருணாநிதியை இரவோடு இரவாக கைது செய்தார். அப்போதைய ஜெயலலிதா ஆட்சியும் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கும் வகையில் தான் இருந்தது. குறிப்பாக உலகில் எங்குமே இல்லாதவகையில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார். இது இந்தியா முழுக்க எதிரொலித்தது. மேலும் அப்போதைய பிஜேபி அரசின் பொடா சட்டத்தை தமிழ்நாட்டில் கடுமையாக அமல்படுத்தி பலரை கைது செய்தார். கூட்டணியை தவற விட்ட காரணத்திற்காக ஏற்பட்ட பல்வேறு தனிப்பட்ட இழப்புகளை சரிக்கட்டவும், மத்திய பிஜேபி ஆட்சியை குளிர்விக்கவும், உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த டான்சி வழக்கில் இருந்து விடுபடவும் சிறுபான்மையினருக்கு எதிராக மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்தார். மேலும் கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடை கொண்டுவந்தார். இந்நிலையில் அப்போதைய வாஜ்பாய் அரசின் கூட்டணி அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருந்த போதும் கூட அன்றைய பிஜேபி தலைவர்கள் சாதிய அடிப்படையில் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்தனர். ஜெயலலிதாவும் தமிழ்நாட்டின் திராவிட கொள்கையைப்பற்றி கவலைப்படாமல் பல தருணங்களில் பிஜேபி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். குறிப்பாக 2002 ல் குஜராத்தில் மோடி முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலையின் போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் மோடி ஆதரவு நிலைபாட்டை ஜெயலலிதா எடுத்தார். இதன் காரணமாக மோடி இவர் மீது நட்பு கொண்டார். வருங்காலத்தில் பிஜேபி சார்பில் இவர் பிரதமராக முன்னிறுத்தப்படுவார் என்பதை ஒருவேளை இவர் கணித்திருக்கக்கூடும். அதன் படியே பிந்தைய நாட்களில் நடந்தேறியது. இதன் தொடர்ச்சியில் ஜெயலலிதாவின் மக்கள் விரோத போக்கு காரணமாக 2004 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுவிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதன் பின்னர் விழிப்படைந்த ஜெயலலிதா சில நலத்திட்டங்களை அறிவித்தார். பின்னர் 2006 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றார். இது ஜெயலலிதா தமிழ்நாட்டில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்ற பிம்பத்தை வலுவடைய செய்தது.
2011 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதாவின் வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனை. அவரின் அம்மா பிம்ப உற்பத்தி அந்த கட்டத்தில் தான் நடந்தேறியது. குறிப்பாக தமிழ்நாட்டின் அடித்தள மக்களின் உளவியலில் நிலைத்துப்போன எம்.ஜி.ஆர் பிம்பம் மாற்றப்பட்டு அந்த இடத்தில் ஜெயலலிதா பிம்பம் முன்வைக்கப்பட்டது. அதற்காகவே அம்மா என்ற வணிக குறியீட்டில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனால் ஐந்து ஆண்டுகளின் நிறைவில் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் பிம்பம் மறக்கடிக்கப்பட்டு அம்மா பிம்பம் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டது. அம்மா என்றாலே ஜெயலலிதா என்று குறிப்பீடு செய்யும் பிம்ப அரசியல் தமிழ்நாட்டில் உருவானது.
ஜெயலலிதாவின் ஆட்சி நிர்வாகம் மற்றும் அவரின் அரசியல் வாழ்க்கை என்பது பல வித மேடு பள்ளங்களையும், அதிகார விளையாட்டுகளையும், முட்களையும், வலிகளையும், இன்ப துன்பங்களையும் உட்கொண்டிருந்தது. சுமார் 35 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அவர் அடைந்த ஏமாற்றங்கள், வைராக்கியங்களாக மாறின. பெரும்பான்மையான ஆண்களை அவர் எதிரியாகவும், சந்தேகத்துடனும் பார்த்தார். இதன் விளைவாக பல ஆண்களை அவரின் காலில் விழ வைத்து அகமகிழ்ந்தார். இது அவரின் முந்தைய திரைத்துறை அனுபவத்தின் பிரதிபலிப்பு எனலாம்.
அரசியல் என்பதே அறத்தோடு தொடர்பு இல்லாதது என்ற மாக்கியவெல்லியின் கூற்றுப்படி எல்லாவித அரசியல் அறங்களையும் ஜெயலலிதா இல்லாமல் ஆக்கினார். பலரை அவமதிப்பது, சிலரை அதிகமாக நம்புவது, அவர்களை மதிப்பது இப்படியான வேலைகளை செய்து கொண்டிருந்தார். தன் 35 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பெரும்பாலான காலகட்டங்களில் அவரின் சாதிய அடையாளம் தான் அரசியலில் அவரை வலுவாக வேர்கொள்ளும் கருவியாக மாற்றியது. அதனால் தான் மதவாதம், இந்துத்துவா போன்ற எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் ஜெயலலிதா பிஜேபியுடன் நட்பு பாராட்டினார். அதே நேரத்தில் சிறுபான்மை தோழியாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். மொத்தத்தில் ஒரு சாதக பிராமணராக ( Opportunist Brahmin) தான் அவர் தமிழ்நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் என்பது உண்மை. அதனை பின்பற்றி தான் இன்றைய அதிமுக (எடப்பாடி, பன்னீர்செல்வம்) மோடியிடம் சரணாகதி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
mohammed.peer1@gmail.com