புதுச்சேரி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி:
தீபங்களின் விழா எனப்படும் தீபாவளி இந்திய மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீய சக்திகள் மீதான கடவுளின் வெற்றி, தர்மத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது. நல்ல செயல்கள் மூலம் நமது வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுவதை தீபாவளி குறிக்கிறது. இந்த தீபஒளி திருநாள் பொதுமக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். புதுவை மாநில மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் நாராயணசாமி:
தீபாவளி திருநாளை நம் நாட்டு மக்கள் தீபஒளி ஏற்றி மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். தீயவை அகன்று நல்லவை நடைபெற புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து குடும்பத்தினருடன் இந்நன்னாளை புதுவை மாநில மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் கொண்டாடப்படும் விழா தீபாவளி. மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினரிம் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என நாம் ஒருங்கிணைந்து பாடுபடும் இவ்வேளையில் மக்கள் நலத்திட்டங்களை முடக்க சில சக்திகள் செயல்படுகின்றன அந்த தடைகளை களைந்து மாநிலத்தில் வளர்ச்சி பெறுவோம் என்ற சூளுரையை இந்நாளில் நாம் அனைவரும் ஏற்போம்.