ஜோத்பூர்

பா ஜ க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குக்காக நடத்தப்பட்ட போலீஸ் அணிவகுப்புக்கு வராமல் காவலர்கள் விடுப்பில் சென்றுள்ளனர்

மத்திய அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ராஜ்நாத் சிங்.  இவரின் ஜோத்பூர் வருகையை ஒட்டி காவலர்களின் அணிவகுப்பு ஒன்று நேற்று மாநில காவல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால் நேற்று காவல் துறையினர் தங்களின் ஊதியம் குறைக்கப்பட்டதை எதிர்த்து 250க்கும் மேற்பட்டவர்கள் ஒரு நாள் மொத்த விடுப்பு எடுத்துக் கொண்டதால் அணிவகுப்பில் பலர் கலந்துக் கொள்ளவில்லை.

ராஜஸ்தான் மாநிலக் காவல் துறைக் கமிஷனர் அஷோக் ராதோட் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.  அவர் பத்திரிகையாளர்களிடம், “ராஜஸ்தான் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் நேற்று மொத்தமாக 250 பேர் ஒருநாள் விடுப்பில் சென்று விட்டனர்.  இவர்கள் முறையாக விடுப்புக் கோரி விண்ணப்பிக்கவில்லை.  அவர்களாக வேலைக்கு வரவில்லை.  இவர்களில் பலர் அமைச்சர் ராஜ்நாத் சிங் குக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்.  ஆனால் அவர்கள் பணிக்கு வர மறுத்ததால் மற்ற காவலர்களைக் கொண்டு அணிவகுப்பை நடத்தி முடித்தோம்.   பணிக்கு வராத காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளோம்” என தெரிவித்தார்.

காவலர்களில் சிலர் இது பற்றிக் கூறுகையில், “இது வரை எங்களுக்கு ஊதியம் குறைக்கப்பட மாட்டாது என எந்த உத்திரவாதமும் மாநில அரசு அளிக்கவில்லை.  இதனால் நாங்கள் எங்கள் எதிர்ப்பைக் காட்ட ஒரே நேரத்தில் பலர் விடுப்பு எடுத்துள்ளோம்.  இது வெறும் சாம்பிள் மட்டுமே. மொத்தத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானை ஆளும் பா ஜ க முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டார்.