மீரட்:

உ.பி. மாநில கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்வு முழுவதையும் சிசிடிவி கேமராவில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீரட் சவுத்ரி சரன் சிங் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசுகையில், ‘‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (என்சிஇஆர்டி) தேர்வு முறைப்படி மாநில பள்ளிகளின் தேர்வு முறையும் மாற்றி அமைக்கப்படும்.

சிபிஎஸ்இ பள்ளிகளின் பாடத்திட்டதிற்கு இணையமாக மாநில அரசு பள்ளிகளின் கல்வி தரத்தையும் உயர்த்த உபி அரசு முடிவு செய்துள்ளது. தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் நடத்தப்படும். அனைத்து தேர்வு தேதிகளும் தீபாவளிக்கு முன்பே அறிவிக்கப்படும். தேர்வு முறைகேடுகளை தடுக்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாத காலத்தில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்படும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களக்கு மன அழுத்தம் இல்லாத சூழ்நிலை உருவாக்கப்படும். ஆசிரியர் பற்றாகுறையை தீர்க்க ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்படும். ஆசிரியர் பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வுகளில் வெளிப்படைத் தன்மை கொண்டுவரப்படும்.

புதிதாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் படி தொடர்ந்து பணியாற்றுவார்கள். யோகி ஆதித்யாநாத் ஆட்சியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு மின்சாரம், உரம், தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.