ஜெய்பூர்:
அரசின் திட்டம் மற்றும் கொள்கைகளை சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்யும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபப்டும் என்று முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசின் பணியாளர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த சுற்றி க்கையில், ‘‘சமூக வலை தளங்களில் அரசுக்கு எதிரான பதிவுகளை வெளியிடும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட இதர சமூக வலை தளங்களில் அரசு ஊழியர்கள் அதிக நேரம் செலவிடுவதாக புகார் எழுந்துள்ளது. அப்போது அரசுக்கு எதிரான பதிவுகளுக்கு அரசின் பெயருக்கு களங்கம் ஏற்ப டுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். உயர் அதிகாரிகளையும் பலர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த பதிவுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பேஸ்புக்கில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து, மறைந்த பிரதமர் நேருவை பாராட்டிய மத்திய பிரதேச ஐஏஎஸ் அதிகாரியான அஜய் கங்வார் இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பர்பானி மாவட்ட கலெக்டராக இருந்த இவர் போபாலில் தலைமைச் செயலகத்திற்கு மாற்றப்பட்டார்.
இது அப்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் சிவ்ராஜ் சிங் சவுகான் அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதேபோல் ராஜஸ்தான் அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கு எதிரான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.