அகமதாபாத்:
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று மாலை 4 மணிக்கு வெளியிட்டது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.
இந்நிலையில் தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியாவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக அகமதாபாத் மாநகராட்சி நிலைகுழு கூட்டம் நடந்துள்ளது. இதில் ரூ. 530 கோடி மதிப்பிலான 15 திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கூட்டம் 4.30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் முன்கூட்டியே 3 மணி தொடங்கிய கூட்டம் 10 நிமிடங்களில் முடி ந்துவிட்டது.
இதில் ரூ. 130 கோடி மதிப்பில் ஒக்னஜ், சிலஜ், பகதஜ் பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக ரூ. 152 கோடியில் 10 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 61 கோடியில் அஜித் மில்ஸ் பகுதியில் மேம்பாலம் அமைத்தல், ரூ. 70 கோடியில் சோலா பகுதியில் 4 வழி மேம்பாலம் ஆகிய திட்டங்களும் இதில் அடங்கும்.
இது குறித்து மேயர் கவுதம் ஷா கூறுகையில், ‘‘ திட்டத்தின் மதிப்பு பெரிதோ? சிறிதோ? அனைத்தும் முறையான விவாதம், விளக்கம் அளிக்கப்பட்ட பிறகே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கீழ்நிலை குழு பரிந்துரை செய்த திட்டங்களுக்கு தான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ’’ என்றார்.
பாஜக மாநில பொருளாளர் சுரேந்திர படேல் கூறுகையில், ‘‘மாலை 4 மணி முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வருவதால் முன்கூட்டியே கூட்டம் நடத்தப்பட்டது. குறித்த நேரத்தில் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டம் முன்கூட்டி நடத்தப்பட்டது’’ என்றார்.