ப்ராகிம்பூர்

ரொக்கமற்ற பரிவர்த்தனையின் (cashless transaction) மாதிரி கிராமம் என அரசால் புகழப்பட்ட தெலுங்கானா மாநில இப்ராகிம்பூரின் மக்கள் ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாறி உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் சித்திப்பேட்டை தாலுகாவை சேர்ந்த கிராமம் இப்ராகிம்பூர்.  மத்திய அரசால் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டபின் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு முதன் முதலில் ஒப்புக் கொண்ட கிராமமும் இதுவாகும்.  இதனால் இதை மத்திய அரசு ரொக்கமற்ற பரிவர்த்தனையின் மாதிரி கிராமம் என புகழ்ந்தது.  இதன் தற்போதைய நிலை பற்றி அறிந்துக் கொள்ள செய்தியாளர் குழு ஒன்று இந்த ஊருக்கு சென்றுள்ளது.

ஆனால் இப்போது நிலைமை அடியோடு மாறி உள்ளது.  முன்பு ஆட்டோ ஓட்டுனர்களும் ரொக்கத்தை வாங்க மறுத்த இந்த கிராமத்தில் தற்போது ரொக்கமற்ற பரிவர்த்தனை அடியோடு நின்று விட்டது.  இது குறித்து பத்திரிகையாளர்கள், “எங்களால் தற்போது எந்த இடத்திலும் கார்டுகள் கொடுத்து எந்தத் தொகையும் செலுத்த முடியவில்லை.   அனைவரும் அந்த அட்டை தேய்க்கும் இயந்திரம் பயன்படுத்தலை நிறுத்தி விட்டனர்.  ஒரளவு பெரிய உணவகத்தில் நாங்கள் எங்கள் டெபிட் கார்டை கொடுத்ததும் அதன் முதலாளி ஏதாவது ஏ டி எம் சென்று ரொக்கம் எடுத்து வருமாறு கூறினார்.” என தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவித்ததாவது :

அரசு ஊழலை ஒழிக்க அதிக மதிப்புள்ள நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததாக மக்கள் மகிழ்ந்தனர்.  அதில் தங்கள் பங்கும் தேவை என்பதனால் கிராமம் முழுவதும் ரொக்கமற்ற பரிவர்த்தனையை துவங்கினர்.  ஆனால் அவர்களுக்கு இந்த கார்டு தேய்க்கும் இயந்திரத்துக்கு மாதம் ரூ. 1400 வாடகை தர வேண்டும் என்பது அப்போது புரியவில்லை.  ஆனால் போகப் போக இந்தக் கட்டணம் அவர்களுக்கு ஒரு சுமையாகி விட்டது.  இந்த ஆறு மாதத்திற்குள் சுமார் ரூ.10000க்கும் மேலாக கட்டணம் செலுத்தியதால் நஷ்டம் அடைந்த அந்த மக்கள் அந்த இயந்திரத்தை திருப்பிக் கொடுத்து விட்டனர்.” என கூறி உள்ளனர்.

இது குறித்து அந்தத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரும் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய உறவினருமான ஹரிஷ் ராவ், “இங்குள்ள மக்கள் சிறு வியாபாரிகள்.  அவர்களால் இந்த கட்டணச்சுமையை தாங்க முடியவில்லை.  அதனால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  வங்கிகளிடம் இந்த கட்டணம் வாங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளோம்.  வங்கிகள் அதை ஒப்புக் கொண்டால் மீண்டும் ரொக்கமற்ற பரிவர்த்தனை இந்த கிராமத்தில் துவங்கும்”என தெரிவித்துள்ளார்.  ஹரிஷ் ராவ் தெலுங்கானா அமைச்சரவையில் நீர்ப்பாசன அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இது மட்டும் இன்றி இந்த கிராமத்தில் எந்த ஒரு ஏ டி எம் மும் இல்லை என்பதால் பலரால் வங்கியில் இருந்து பணம் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.  அதனால் தேவலதா என்பவர் மகளிர் சுய உதவி வங்கியான ஸ்ரீநிதி வங்கி திட்டத்தின் கீழ் மக்களுக்கு அட்டை தேய்க்கும் இயந்திரம் மூலம் பணம் வழங்கி வருகிறார்.  அவர் ஆந்திரா வங்கியின் உதவியுடன் இதை நடத்தி வருகிறார்.  இது அங்குள்ள ஓய்வூதியம் பெறும் மக்களுக்கு பெரிதும் உதவுகிறது.  இதில் கிடைக்கும் கமிஷன் மூலம் தேவலதாவுக்கு மாதம் ரூ 3000 முதல் ரூ. 4000 வரை வருமானம் வருகிறது.

ரொக்கமில்லா பரிவர்த்தனையின் மாதிரி கிராமத்தில் ஒரு ஏ டி எம் கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது.