புதுகை:
சர்ச்சை தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் சிறையில் அடைக்கப்பட்ட அவரது கூட்டாளி திண்டுக்கல் ரத்தினம் துவங்கி உள்ள வேளாண் கல்லூரி விழாவில் நடிகர் விவேக் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழக துணை முதல்வர் ஓபி.எஸ்.ஸுக்கு நெருக்கமானவரா் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டி. மணல் கொள்ளையில் தொடர்புடையவர் என்று ஆதாரத்துடன் தகவல்கள் பல முறை வெளியாகி உள்ளன.
இவரது வேலூர், காட்பாடி, காந்தி நகர் வீடுகள், அண்ணா நகர், தி.நகர் அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. இதில் பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்களும், புதிய ரூபாய் நோட்டுக்களும், கிலோ கணக்கில் தங்க நகைகளும் மற்றும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படியே தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடம், அவருடைய கூட்டாளி சீனிவாசலு, புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்னம் ஆகியோரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேகர் ரெட்டியின் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் துணையாக இருந்தவர் என்ற புகாருக்கு ஆளாகியிருக்கும்திண்டுக்கல் ரத்னமும், புதுக்கோட்டை ராமச்சந்திரனும்தான் தமிழகத்தின் மணல் வியாபாரத்தை கையில் வைத்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில் கல்வித் தொழிலிலும் திண்டுக்கல் ரத்தினம் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல கல்லூரியான ஜி.டி.என் கலை கல்லூரியை விலைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டையில் புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரி துவங்கியிருக்கிறார். இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் விவேக், புதுகை மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மேலும் நான்கு அமைச்சர்கள் கலந்துக் கொண்டார்கள். மணல் கடத்தல் உட்பட பல புகார்களுக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டவர் கல்லூரி துவங்குவதும் அந்த நிகழ்ச்சியில் ஆட்சித்தலைவர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொள்வதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், திரைப்படங்களில் பிறருக்கு அறிவுரை கூறி சமூக ஆர்வலராக முகம்காட்டும் நடிகர் விவேக் கலந்துகொண்டதும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.