டில்லி

காந்தி கொலை பற்றிய புதிய வழக்கில் உச்ச நீதி மன்றத்துக்கு உதவி மூத்த வழக்கறிஞர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழித்து புதிய வழக்கொன்று பதியப்பட்டுள்ளது.    காந்தி 30.1.1948 அன்று சுடப்பட்ட வழக்கில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே இருவரும் 15.11.1949 அன்று தூக்கில் இடப்படனர்.    தற்போது மும்பையை சேர்ந்த அபினவ் பாரத் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பங்கஜ் பத்னிஸ் என்பவர் உச்ச நீதி மன்றத்தில் ஒரு புதிய வழக்கு மனு அளித்துள்ளார்.

அதில், “காந்தி இறக்கும் போது அவர் மீது 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.  ஆனால் கோட்சே மொத்தம் 3 முறைதான் சுட்டுள்ளார்.   அப்படி இருக்க நான்காவது குண்டை யார் சுட்டார்கள் என விசாரணை நடைபெறவில்லை.  அந்த நான்காவது குண்டினால் தான் காந்தி உயிர் இழந்துள்ளார்.

இது தவிர இது குறித்து கடந்த 1966ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கே. எல் கபூரி தலைமையிலான ஆணையம் எந்த ஒரு உண்மையையும் வெளிக்கொணரவில்லை.  கோட்சே பயன்படுத்திய துப்பாக்கியை அவருக்கு கங்காதர் தாண்டவதே என்பவர் அளித்துள்ளார்.  கங்காதருக்கு ஜகதீஷ் கோயல் என்பவர் கொடுத்துள்ளார்.  ஆனால் ஜகதீஷுக்கு அந்த இத்தாலி பெரட்டா ரக துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது தெரிய வில்லை.   அந்த துப்பாக்கியின் பதிவு எண்ணான 606824 என்பதை ஆராய்ந்து அது குவாலியர் டாக்டர் ஒருவருக்கு சொந்தமானது என ஐயம் எழுந்தது.

ஆனால் அந்த டாக்டரிடம் அதே ரக துப்பாக்கி இருந்தது.  அந்த துப்பாக்கியின் பதிவு எண் 719791.   ஆனால் அதே பதிவு எண்ணில் குவாலியரை சேர்ந்த உதயசந்த் என்பவரிடமும் வேறொரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஆனால் காந்தியின் உடலில் பாய்ந்த அந்த 4ஆவது குண்டு மேலே குறிப்பிட்டுள்ள இரு பதிவு எண்களில் உள்ள துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்டது அல்ல என போலீஸ் தனது விசாரணை அறிக்கையில் அளித்துள்ளது.  இந்த நான்காவது குண்டு எந்த துப்பாக்கியால் யாரால் சுடப்பட்டது என்பதை கண்டறிய உச்சநீதி மன்றம் விசாரணைக்கு ஆணை இட வேண்டும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதி மன்றத்தின் விசாரணைக்கு வந்தது.  நீதிபதிகள் இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கலாமா என்பது பற்றி ஆராய்ந்து உச்சநீதிமன்றத்து தெரிவிக்க மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரண் என்பவரை நியமித்துள்ளனர்.