டாக்கா

ராகினே பகுதியில் உள்ள ரோஹிங்கியா இந்துக்களை தாக்குவது யார் என மியான்மர் அரசு தகவல்கள் வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் இந்து கிராமத்தில் இருந்து பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கடத்தப்பட்டு பின் அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.    அந்த இந்து மக்களை தாக்கிக் கொன்றது இஸ்லாமியர்களே என மியான்மர் அரசு கூறி உள்ளது.

சமீபத்தில் ரோஹிங்கியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வந்த அகதிகளில் மிக மிக குறைந்த அளவிலேயே இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர்.   அவர்களின் கருத்துக்களின் படி அங்குள்ள இந்து மதத்தை சேர்ந்தவர்களில் பலர் ரோஹிங்கியா இஸ்லாமியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த சில நாட்களாகவே அகதிகளாக வந்துள்ள இந்துக்கள் தனித்து முகாமிட்டு வாழ்ந்து வருகின்றனர்.   அதற்கு காரணமாக அவர்கள் தெரிவிப்பது இஸ்லாமியர்கள் மியான்மரில் தங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்களை அழித்ததாகவும், இங்கும் இஸ்லாமியர்கள் தங்களை சேர்த்துக் கொள்வதில்லை என்பதே ஆகும்.   தனியாக முகாமில் வசிக்கும் ஒரு பெண் தான் இஸ்லாமியர் போல தொழுகை செய்யாததாலும்,  புர்கா அணிய மறுத்ததாலும் இஸ்லாமியர் உள்ள முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் வேறு சில பத்திரிகையாளர்கள் அகதிகளில் சிலர் தங்களிடம் வேறு விதமாக தகவல்கள் தெரிவித்ததாக கூறுகின்றனர்.  “நாங்கள் இஸ்லாமியர்களுடன் தான் வங்க தேசத்துக்கு தப்பிவந்தோம் எனவும் புத்த மதத்தினர்தான் தம்மை தாக்கியதாகவும் கூறி உள்ளனர்.   அவர்கள் கூறியவற்றை நாங்கள் ஆடியோ பதிவாக்கி உள்ளோம் என சொல்கின்றனர்.

மியான்மர் அகதிகளில் சிலர் தாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் அரசையும் புத்தமத தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்காததால் ராணுவத்தினரால் சுடப்பட்டதாகவும்,  உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ராணுவத்தினரிடம் இருந்து தப்பி வந்ததாகவும் கூறுகின்றனர்.   இதை ஒரு பெண் பத்திரிகையாளரும் மியான்மரில் இருந்து தப்பி வந்த ஒரு பெண் அகதியும் உறுதிப் படுத்தி உள்ளனர்.

பொதுவாக இந்துக்களுக்கு கிரீன் கார்டு அந்தஸ்துடன் கூடிய குடியிருப்பு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது ரோஹிங்கியா இஸ்லாமியருக்கு பிடிக்கவில்லை எனவும் அதனால்தான் அவர்கள் இந்துக்களை அழிக்க முயன்றுள்ளனர் என்னும் கருத்தே அரசு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.   ஆனால் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் இது மியான்மர் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிகளில் ஒன்று எனவும் இந்துக்களுக்கும் தங்களுக்கும் எந்தப் பகையும் விரோதமும் இல்லை என கூறி உள்ளனர்.   இதற்கு நேர்மாறாக மற்றொரு இஸ்லாமியர் தங்களின் வீடுகளை ராணுவத்தினருக்கு அடையாளம் காட்டியதே இந்துக்கள் தான் என தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் இந்த சூழலில் அகதிகள் முகாமில் உள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களில் பலரும் இந்து அகதிகளை தங்கள் முகாமில் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதே உண்மை என அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.