கோ.செங்குட்டுவன் அவர்களின் முகநூல் பதிவு:
நடிகர் திலகம் அமெரிக்கா சென்று திரும்பியிருந்த நேரம்.
28.09.1962இல் விழுப்புரம் நகரசபை சார்பில் அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சிவாஜி கணேசன், வரும் வழியில் நந்தவனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வள்ளலார் சத்தியஞான சபைக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நகரசபையில் நகரமன்றத் தலைவர் டி.எஸ்.பத்தர் தலைமையில் விழா. அதில், சிவாஜி கணேசனின் பிறப்புச் சான்றிதழை (01.10.1928) வெள்ளிப் பேழையில் வைத்து அவரிடம் கொடுத்தனர்.
இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சிவாஜி கணேசன் “நான் பிறந்தது விழுப்புரத்தில்தான் என உறுதியாகக் கூறி அதற்கான சட்ட பூர்வமான அத்தாட்சியை வழங்கியமைக்கு நன்றி” தெரிவித்துக் கொண்டார்.
பின்னாளில் தனது சுயசரிதையில் நடிகர் திலகம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
“ஒருமுறை எனக்கு விழுப்புரம் முனிசிபாலிட்டியில் வரவேற்பு கொடுத்து கௌரவித்தார்கள். என்னுடைய பிறப்பை பதிவு செய்தாரே ஒரு பியூன், அவருக்கு ஐம்பது அறுபது வயதிருக்கும், அவர் மூலம் எனக்கு அந்த சர்டிபிகேட் பிரசன்ட் செய்தார்கள். அன்று நான் அடைந்த சந்தோஷம் போல் என்றும் அடைந்ததில்லை. என்னுடைய பிறப்பிற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறதென்று, அப்போது நான் தெரிந்து கொண்டேன்”.
நடிகர் திலகம் பிறந்தது திருச்சி, தஞ்சாவூர், சூரக்கோட்டை என விதவிதமானத் தகவல்கள் இப்போதும்கூட வந்துகொண்டிருக்கின்றன.
நடிகர் விவேக்கும் திரைப்படம் ஒன்றில், சூரக்கோட்டைன்னு ஒருஊரு அங்கதான் சிவாஜி பொறந்தாரு” ன்னு வசனம் பேசியிருப்பார்.
இன்றுகூட வசந்த் தொலைக்காட்சியில் சிவாஜி கணேசன் சீர்காழியின் பிறந்தார்னு போட்டுக்கிட்டு இருக்காங்க.
வரலாறு தெரியாதவர்கள். அல்லது தெரிந்தும் திரிப்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்! இருக்கட்டும்.
28.09.1962இல் விழுப்புரத்தில் நடந்த விழாவில் சிவாஜி கணேசன் பேசும்போது,“எனது தாயார் பெயரில் கல்லூரி ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று வரவேற்பில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லாமல் கூடிய விரைவில் அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன். கல்லூரி கட்ட அரசாங்கத்தை எதிர்பார்ப்பதைவிட கலைஞர்களை எதிர்பார்ப்பதுதான் நல்லது. நான் நாடகம் நடத்தி பணம் சேர்த்து கல்லூரி கட்ட முயற்சி செய்கிறேன்” என உறுதியளித்திருந்தார்.
விழுப்புரத்தில் அப்படி எதுவும் கல்லூரி கட்டப்படவில்லை.
சரி, அவரது வாரிசுகளாவது தமது தந்தையார் பிறந்ததன் நினைவாக விழுப்புரத்தில் நினைவுச் சின்னம் அமைத்திருக்க வேண்டும். அவர்களும் மறந்துவிட்டார்கள், விழுப்புரத்தை.ஆனால், விழுப்புரம் மட்டும் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறது,
இந்த மண்ணில் பிறந்து, தனது மடியில் தவழ்ந்த அந்தக் கணேசனை!