டில்லி,
இந்த கல்வி ஆண்டில் படிக்கும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.
வங்கி பரிவர்த்தனை, ரேஷன், போன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை அனைத்துவிதமான திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவித்த மத்திய அரசு தற்போது மாணவர்களின் தேர்வுக்கும் ஆதார் எண் கட்டாயம் பதிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2017-18 கல்வியாண்டு முதல் தேர்வுகளை எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் தங்கள் 9 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆதார் எண் உட்பட அனைத்து ஆவணங்களையும் சிபிஎஸ்இ இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆதார் எண் இல்லாத மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணின் பதிவெண்ணை வழங்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தேர்வு எழுதவும் ஆதார் எண் தேவை என்பதை சிபிஎஸ்இயின் இந்த உத்தரவு தெளிவுபடுத்தி உள்ளது.