டில்லி,
ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்னர் இருப்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை வணிகர்கள் பழைய விலைக்கே விற்பதற்கான அவகாசம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த ஜூலை 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியது. இதன் காரணமாக ஏற்கனவே கைவசம் உள்ள பொருட்களின் விலை, தரம், அதற்கான காலம் போன்றவை கேள்விக்குறியாகின.
இதையடுத்து வணிகர்கள் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விற்பனை செய்ய கால அவகாசம் நீட்டிக்க கோரி மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, இன்றுடன் முடிவடைவதாக இருந்த பழைய பொருட்கள் விற்பதற்கான அவகாசம் டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜிஎஸ்டி அமலுக்கு முன் இருப்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பழைய அதிக பட்ச விலைக்கே, வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வணிகர்களுக்கு வழங்கப்பட்டடுள்ளது.
இதுகுறித்து ஏற்றுமதி மற்றும் தொழில்துறையினர், நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழைய பொருட்களின் மீது, ஜிஎஸ்டி வரி சேர்க்கப்பட்ட புதிய விலைக்கான லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தால், அவற்றின் மீது ஜிஎஸ்டிக்கு முந்தைய பழைய விலை லேபிள்களை ஒட்டி, டிசம்பர் 31ம் தேதி வரை வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.