
நவராத்திரியின் ஒன்பதாம் நாளான 29.09.17 அன்று சரஸ்வதி பூஜையாகவும் ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
கல்விக்கு கடவுள் சரஸ்வதி. அதே சரஸ்வதி பூஜை அன்று நமது தொழிலுக்கு நாம் உபயோகிக்கும் ஆயுதங்களுக்கும் பூஜை நடத்துவது வழக்கம். இது அனைத்து இல்லங்களிலும், அலுவலகங்களிலும், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளிலும் கொண்டாடப்படுகிறது.
வீடுகளில் பூஜை கொண்டாடும் முறை :
முதலில் வீட்டை நன்கு சுத்தம் செய்து மாவிலை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து உபகரணங்களும், கதவுகளும் சுத்தமாக இருக்க வேண்டும். பிறகு அவற்றுக்கு சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டு இட வேண்டும். பூவால் அலங்கரிப்பது மிகவும் நன்று. சாமிக்கு முன் ஒரு மணையில் கோலமிட்டு, அதில் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்து அவைகளுக்கும் பூ இட வேண்டும். பிறகு சரஸ்வதி சிலையை அதன் மேல் வைத்து, தெரிந்த சரஸ்வதி மந்திரங்களைக் கூறி பூஜை செய்ய வேண்டும்.
வடை, பாயசம், வெற்றிலை, பாக்கு, பழங்கள், சுண்டல் ஆகியவற்றுடன் பொரி, கடலை, ஆகியவற்றையும் இறைவனுக்கு படைக்க வேண்டும். தூப தீப ஆராதனைகள் செய்து பூஜையை முடிக்க வேண்டும்.
அலுவலகம் மற்றும் கடைகள் :
அனைத்து இயந்திரம், ஷோ கேஸ், சாமி படங்கள் ஆகியவற்றை நன்கு துடைத்து அவற்றுக்கு சந்தன, குங்கும பொட்டு இட வேண்டும். அலுவலக வளாகம் மற்றும் வாயிலில் தோரணங்கள், கலர் காகிதங்களால் அலங்கரிக்கலாம். அனைத்து கணக்கு புத்தகங்கள் மற்றும் முக்கியமான ரிகார்டுகளை சாமி படத்துக்கு முன்பு அடுக்கி வைக்க வேண்டும். ஒரு நுனி வாழை இலையை விரித்து, அதில் பொரி, கடலை, வெல்லச் சர்க்கரை மற்றும் அவல் ஆகியவைகளை சேர்த்து அந்த இலையில் வைக்க வேண்டும். பழவகைகளையும் சுற்றிவர வைக்க வேண்டும்.
பின்பு அனைத்து இயந்திரம், புத்தகங்கள் ஆகியவற்றுக்கு பூவைக் கொண்டு பூஜை செய்து இலையில் உள்ளதை படைக்க வேண்டும். படைத்தவைகளை அனைவருக்கும் விநியோகம் செய்ய வேண்டும். சிலர் தேங்காய், மற்றும் பூசணிக்காய்களை திருஷ்டி சுற்றி போடுவதுண்டு. குறிப்பாக பூசணிக்காயை உடைப்பவர்கள் தெரு ஓரமாக உடைத்தால் வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து அடிபட்டுக் கொள்வதை தவிர்க்கலாம்.
நாளை 29.09.17 அன்று வேலை நாளாக இருக்கும் அலுவலகங்களில் இன்றோ (28.09.17) அல்லது நாளை மறுநாள் (30.09.17) விஜய தசமி அன்றோ பூஜை செய்யலாம்.
பூஜைக்கான நேரங்கள்
28.09.17 : காலை 9.15 – 10.15
மதியம் 1.15 – 1.30
மாலை 4.30 – 7.15
இரவு 8.15 – 9
29.09.17 : காலை 6.15 – 9
காலை 10.15 – 10.30
மாலை 5.15 – 6.15
இரவு 8.15 – 9.15
30.09.17 : காலை 7.15 – 7.30
காலை 10.45 – 12
மாலை 5.15 – 7.30
அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை பத்திரிகை.காம் தெரிவித்துக் கொள்கிறது.
[youtube-feed feed=1]