லக்னோ
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கலவரங்கள் குறித்து நீதி விசாரணை நடைபெறும் என உ பி அரசு அறிவித்துள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள இந்து பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பல்கலைக் கழக விடுதி வாசலில் சிலர் பாலியல் தொல்லை தந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்காத பல்கலை நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் சில வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 1200 மாணவர்கள் மேல் வழக்கு தொடரப்பட்டதாக செய்திகள் வந்தன. எதிர்க்கட்சிகள் தடியடி நடைபெற்றதை கண்டித்து ஆளும் பா ஜ க வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. பா ஜ க தலைமை இந்த பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணவேண்டும் என உ பி மாநில அரசுக்கு ஆணை இட்டது. இதனால் நேற்று முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது
கூட்டம் முடிந்ததும் உ பி மாநில அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா பத்திரிகையாளர்களிடம். “இந்த சம்பவம் அரசுக்கு பெரிதும் கவலையை உண்டாக்கியுள்ளது. இது குறித்து உண்மை அறிய நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தி, கண்காணிப்பு காமிராக்கள் உடனடியாக பொருத்தப்படும்” என தெரிவித்தார்.