டில்லி
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஷார்ஜா மன்னருக்கு இந்தியர்களை சிறையில் இருந்து விடுவித்ததற்கக நன்றி தெரிவித்துள்ளார்.
ஷர்ஜாவின் மன்னர் சுல்தன் பின் முகமது அல் காசிமி கேரளாவுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஞாயிறு அன்று வந்தார். கேரளாவின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். திருவனந்தபுரம் ராஜ் பவனில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக விழாவில் அவருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துக் கொண்டார்.
அப்போது பினராயி விஜயன் ஷார்ஜாவின் சிறையில் சிறு குற்றங்களுக்காக மூன்று வருடங்களுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்களை விடுவிக்குமாறு ஷார்ஜா மன்னரை கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த மன்னர், “ஷார்ஜா சிறையில் பல நாட்டு மக்கள் உள்ளனர். கேரள மக்கள் மட்டும் இல்லை. அவர்களில் பலர் சண்டை சச்சரவு போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களே. அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள்” என அறிவித்தார்.
இதன் மூலம் 149 இந்தியர்கள் ஷார்ஜா சிறையில் இருந்து விடுவிக்கப் படுகிறார்கள். இதற்கு கேரள முதல்வர் அந்த மேடையிலேயே நன்றி தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தந்து டிவிட்டர் பக்கத்தில் ஷார்ஜா மன்னருக்கு நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “இந்தியாவை சேர்ந்த 149பேரை சிறையில் இருந்து விடுவித்த மாண்புமிகு ஷார்ஜா மன்னருக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.