சான் ஃப்ரான்சிஸ்கோ
டிவிட்டரில் இனி 280 எழுத்துக்களில் செய்தி அனுப்ப முடியும் என செய்தி வந்துள்ளது.
சமூக வலை தளமான டிவிட்டர் மிகவும் பிரபலமாக விளங்குகிறது. அரசியல், கலை, செய்தி போன்ற பல துறைகளில் உள்ள பிரபலங்களும் டிவிட்டர் மூலம் செய்தி அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவிலும் டிவிட்டர் மூலம் செய்தி அனுப்புவதும் அதற்கு அதைப் படிப்பவர் பதிலளிப்பதும் இப்போது சர்வ சகஜமாகி விட்டது.
ஆனால் டிவிட்டரில் செய்திகள் அனுப்பும் போது 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது சொல்வதை சுருங்கச் சொல்லியாக வேண்டும். பல நேரங்களில் அந்த செய்திகளில் முழு எண்ணத்தையும் பிரதிபலிக்க முடியாத நிலை இருந்தது. அதனால் டிவிட்டர் தனது செய்தியின் நீளத்தை இருமடங்காக்கி உள்ளது.
டிவிட்டர் தனது ’ப்ளாக்;கில், “உலக மக்கள் அனைவரும் அவரவர் எண்ணங்களை தடையின்றி டிவிட்டரில் பதிவதை நாங்கள் விரும்புகிறோம். அதற்காக தற்போது 140 எழுத்துக்கள் மட்டுமே பதிய முடியும் என்பதை 280 எழுத்துக்களாக மாற்ற உள்ளோம். இந்த வசதிகள் ஜப்பான், சீனா மற்றும் கொரிய மொழிகளைத் தவிர மற்ற மொழிகளில் செய்தி அனுப்ப வகை செய்யும். தொழில் நுட்பம் முழுமையாக மேம்படுத்தப் பட்ட போதிலும், ஒரு சிறு குழுவினருக்கு மட்டும் இந்த வசதியை தற்போது அளிக்க இருக்கிறோம். ஒரு பரிசோதனைக்காக இவ்வாறு செய்கிறோம். விரைவில் அனைவருக்கும் இந்த வசதியை வழங்க உள்ளோம்” என தெரிவித்துள்ளது.