சென்னை:

கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க 15 நாட்கள் அவகாசம் கேட்டு தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 31ம் தேதிக்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் வரும் 29ம் தேதிக்குள் இரு தரப்பினரும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் மற்றும் கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். அதில், பெருவாரியான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் வசம் இருப்பதால் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதிக்கும்படி கூறியிருந்தனர்.

அதேசமயம் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் டிடிவி தினகரனும், தனியாக ஆவணங்களை தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக தனியாக தனது ஆதரவாளர்களை கொண்டு புதிய பொதுக்குழு – செயற்குழுவை உருவாக்கும் முயற்சிகளில் டி.டி.வி.தினகரன் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே தேர்தல் ஆணையம் கேட்ட கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 6ம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளின் முக்கிய தலைவர்கள் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தினகரன் அளித்துள்ள மனு பற்றி இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.