மும்பை:

மகாராஷ்டிராவில் கடந்த 2 ஆண்டுகளில் தீவிரவாத செயலுக்கு மூளை சலவை செய்யப்பட்ட 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 450 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர் (ஏடிஎஸ்) கடந்த 2 ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் தீவிரவாத இலக்கியம் பயின்று வந்த 70 பேரை மீட்டுள்ளனர். இந்த படையின் சைபர் ஆய்வுக் கூடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தீவிரவாத பிரச்சாரத்தில் ஈடுபட்ட 450 இணையதளங்களை முடக்கியுள்ளது.

இந்த படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் போதனைகள் பலதரப்பட்ட நபர்களால், பல கட்டங்களில் அளிக்கப்படுகிறது. இதன் கொள்கைகளை பகிரும் இளைஞர்களுடன் இந்த அமைப்பு தொடர்பு வைத்துள்ளது. இவர்களுடன் ஆன்லைன் சாட்டிங் மற்றும் சிறப்பு செயலிகள் மூலம் தொடர்பு வைத்துள்ளது. இவற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

ஐஸ்ஐஎஸ் வலையில் சிக்குபவர்களின் பலவீணத்தை கண்டுபிடித்து அதற்கு ஏற்ப அவர்களை கையாளுகிறது. இவர்களிடம் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டார். அவருக்கு எப்படி கவுன்சிலிங் கொடுத்தார்கள் என்ற விபரத்தை தெரிந்து கொண்டோம்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபரிடம் அந்த பெண்ணை ஒப்படைக்கும் போது போர் களத்திற்கு செல்கிறோம் என்று கூறியுள்ளனர். அந்த 2ம் நபர் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எப்படி துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை எடுத்து கூறியுள்ளார்.

இவ்வாறு மூளை சலவை செய்யப்பட்ட நபர் மூன்றாவதாக ஒருவரிடம் ஒப்படைக்கப்படுகிறார். இவர் தெற்கு ஆசியாவில் கைதேர்ந்த நபராக இருக்கிறார். அவர் இந்தியாவில் முசாபர்நகர் போன்று கலவரம் மற்றும் மோதல்களை உருவாக்குவது குறித்து பேசுகிறார்’’ என்றார்

‘‘தேர்வு செய்யப்பட்ட நபர் மூலம் முதலில் உள்ளூரில் தாக்குதல் நடத்த திட்டமிடுகின்றனர். இறுதி இலக்காக, முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்று கூறுகின்ற இடத்தில் ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என குரானில் உள்ளது என்று இறுதி இலக்கு குறித்து விவரிக்கின்றனர். மூளை சலவை செய்யப்படும் நபர்களுக்கு ஆன்லைன் மூலம் வெடி பொருட்கள் தயாரிக்க உதவும் புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

தீவிரவாத தடுப்பு படையினர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் தேர்வு நடப்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனால் உரிய நேரத்தில் இது தடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மீட்கப்படும் நபர்களின் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது’’ என்றார் அந்த அதிகாரி.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘மீட்கப்பட்டவர்களுக்கு பெற்றோர் உதவியுடன் மத ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. மீட்கப்படும் நபர்களுடன் தொடர்ந்து தொடர்பில இருக்கிறோம். சைபர் பிரிவு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இது ஒரு தொடர் நடவடிக்கையாக இருக்கும். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு 22 மாகாணங்கள் செயல்படுகிறது. அதனால் இதன் அச்சுறுத்தல் முடிவுற்றதாக கருத முடியாது.

மூளை சலவை மூலம் ஆட்களை தேர்வு செய்வதை தடுக்க இரண்டு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்பப்படுகிறது’’ என்றார்.