மும்பை

த்ரபதி சிவாஜிக்கு சிலை எடுக்க ரூ.3600 கோடி செலவு செய்யும் மகாராஷ்ட்ர அரசு பாலங்களை பழுது பார்க்க பணமின்றி கடன் வாங்கி உள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள பல பாலங்கள் சுதந்திரம் அடைவதற்கு முன்பு கட்டப்பட்டவை.  அவைகள் காலப்போக்கில் பழுதடைந்து வருகின்றன.  தற்காலிகமாக பழுது பார்க்கப்பட்டுள்ளன.  சமீபத்தில் மாநிலம் முழுவதும் பெய்த மழையால் அனைத்துப் பாலங்களும் கடும் சேதம் அடைந்துள்ளன.  இதனால் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வேலைகள் முடிய சுமார் ரூ.1600 கோடி வரை செலவாகும் என பொதுப்பணித்துறை மதிப்பீடு செய்துள்ளது.

ஆனால் தற்போது மகாராஷ்டிர அரசிடம் தேவையான பணம் இல்லை என தெரிய வந்துள்ளது.  அரசின் தற்போதைய கடன் தொகை ரூ 4 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.  எனவே இந்த பாலஙகளை உடனடியாக பழுது பார்க்க மேலும் கடன் வாங்கியே ஆகவேண்டும் என்னும் நிலையில் மகாராஷ்டிரா அரசு உள்ளது.

மகாராஷ்டிரா நிர்மான் சேனையின் செயலாளர் சந்தீப் தேஷ் பாண்டே, “நாங்கள் மராட்டிய வீரர் சிவாஜி மகராஜுக்கு சிலை எடுப்பதை எதிர்க்கவில்லை.  மராட்டியர்கள் அனைவருக்கும் அவர் ஒரு மாபெரும் தலைவர். ஆனால் அவருடைய நினைவுக்காக சிலை எடுப்பதை விட அவருடைய கோட்டைகளை புதுப்பிக்கலாம். மற்றும் அவர் வாழ்ந்த இடங்களை காட்சியகம் ஆக்கலாம்.  அதை விடுத்து உயரமான சிலை எடுத்தால் தான் அவருடைய புகழ் உயரும் என்னும் நிலையில் இல்லை.  தற்போதுள்ள நிலையில் பாலங்களை பழுது பார்க்க ரூ.1600 கோடி கடன் வாங்குவது மாநிலத்தின் நிதி நிலைமையை பெரிதும் பாதிக்கும் செயலாகும்.”என கூறி உள்ளார்.

ஆனால் பொதுப்பணித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாடில், “பாண்டே சொல்வது தவறானது. மாநிலத்தின் நிதிநிலைமை சீராக உள்ளது.  விவசாயிகளின் கடன்களை ரத்து செய்த பின்னும் தேவையான அளவுக்கு அரசிடம் நிதி உள்ளது.  அரசுக்கு இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்பது நன்றாகவே தெரியும்” என பதிலளித்துள்ளார்.