பார்சிலோனா:
ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பகுதியில் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா மாகாணத்திலும் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் பார்சிலோனா. இந்நாட்டில் கேட்டலோனியா என்கிற தன்னாட்சி பெற்ற மாகாணம் உள்ளது. இதற்கு என தனி நாடாளுமன்றம் உண்டு.
கடந்த 2008-ம் வருடம் சர்வதேச அளவில் பொருளாதாரம் கடுமையாக சரிவை சந்தித்தது. அப்போது கேட்டலோனியா மாகாணம் மிக மோசமான பாதிப்புக்குள்ளானது. தொழில்வளர்ச்சி குன்றியதோடு, வேலை இல்லாத்திண்டாட்டமும் அதிகரித்தது.
ஸ்பெயின் கூட்டரசில் மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்தக் கூடிய மாகாணம் கேட்டலோனியாதான். ஆனால், வரி குறைவாக செலுத்தும் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுதான் கேட்டலோனியாவுக்கும் கிடைத்தது.
ஸ்பெயின் மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது கேட்டலோனியா மக்களை கிளர்ந்தெழச்செய்தது. இது தனி நாடு கோரிக்கை அளவுக்குச் சென்றுவிட்டது.
கடந்த 2014-ம் ஆண்டும் கேட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதை ஸ்பெயின் அரசு நிராகரித்து சட்டவிரோதமானது என அறிவித்தது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 1ம் தேதி, தனி நாடாக பிரிவதற்காகன வாக்கெடுப்பை மீண்டு நடத்தப்போவதாக கேட்டலோனியா அறிவித்துள்ளது.
இப்போதும் ஸ்பெயின் மத்திய அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மீறி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அம் மாகாணத்தின் தன்னாட்சி உரிமையை ஸ்பெயின் மத்திய அரசு பறிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவில் மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை செயல்படுத்துவது போல கேட்டலோனியா நிர்வாகத்தை ஸ்பெயின் மத்திய அரசு நேரடியாக எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.