
ஐதராபாத்
வருமானத்துக்கு அதிகமாக ரூ.500 கோடி சொத்து சேர்த்த ஆந்திர மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநில மாநகராட்சித்துறை நகர்ப்புற வளர்ச்சி மையத்தில் நிர்வாக இயக்குனராக பணி ஆற்றி வருபவர் கோலா வெங்கட ரகுராணி ரெட்டி. இவர் நாளை ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறுவதற்காக தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வெளிநாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் ஆடம்பர விருந்துக்கு ஏற்பாடு செய்து, அதற்கான விமான டிக்கட்டுகளும் வாங்கி உள்ளார்.
திடீரென நேற்று காலை ஊழல் தடுப்பு காவலர்கள் ரெட்டியின் வீட்டை சோதனை இட்டுள்ளனர். அது தவிர அவருடைய விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடி உள்பட 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்துள்ளது. சோதனையில் அவர் ஊழல் செய்து சொத்து சேர்த்ததற்கான பல ஆவணங்கள் பிடிபடவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் தடுப்பு பிரிவு காவல்படை தலைவர் ஆர் பி தாகூர், “வரும் திங்கட்கிழமையில் இருந்து நடைபெறும் சோதனையில் இதுவரை சுமார் ரூ.500 கோடி பெறுமானமுள்ள சொத்துக்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. இன்னும் வங்கி லாக்கர்களை சோதனை இடவேண்டி உள்ளது. முழு சோதனையும் முடிந்த பின்பு தான் அவருடைய மொத்த சொத்து மதிப்பு தெரிய வரும். அவருடைய வருமானம் அதிகபட்சம் மாதம் ரூ.1 லட்சம்தான். எனவே இந்த சொத்துக்கள் அவர் ஊழல் செய்து வாங்கியவைகள் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பினாமிகள் பலர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் வீடுகளிலும் ரெட்டியின் உறவினர் வீடுகளிலும் இன்னும் சோதனை நடக்கிறது. ரெட்டியின் உறவினரான சிவபிரசாத்தின் விஜயவாடா விட்டில் ரூ.19 கோடி பெறுமானமுள்ள தங்க வைர நகைகள் வாஷிங் மெஷின் உள்ளே ஒளித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ரெட்டியின் வீட்டில் 10 கிலோ தங்கமும், ஏராளமான வைர நகைகளும் பிடிப்பட்டுள்ளது. வெள்ளிப் பொருட்கள் 25 கிலோ, மற்றும் தங்கச் சிலைகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேல்பூரில் ரெட்டிக்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணை நிலம் உள்ளதும் அது தவிர அவரது உறவினர்கள் 8 பேர் பெயரில் பினாமியாக பல ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. சோதனை இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது,
[youtube-feed feed=1]