இட்லின்னு சொல்றோம் இல்லையா.. இதோட சரியான உச்சரிப்பு இட்டளி. “இட்டு அவித்து அளி” என்பது சுருங்கி.. மருவி.. இட்டளி ஆகி, பிறகு இட்லி ஆகிவிட்டது” அப்படின்னு தமிழ் ஆசிரியர் ரங்கநாதன் சொன்னார்.
“இட்லியோட பண்டைக்கால பெயர் இட்டரிக என்பதாகும்”னு வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜம்புலிங்கம் சார் சொல்றார்.
ஆனாலும் இட்லி பத்தின விவரங்கள் கடந்த 700 ஆண்டுகளாகத்தான் வரலாற்று சுவடுகள்ல காணக்கிடைக்குதாம்.
அடையாறு பகுதியில பேமசா இருக்கிற ஓட்டல்ல இட்லி மாஸ்டரா இருக்கிறவரு குப்பண்ணன். நம்ம தோஸ்து. அவர்கிட்ட கேட்டேன்…”இட்லியில பலவகை உண்டு. செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி , சாம்பார் இட்லி, ரவா இட்லி, அப்படினு பாரம்பரியம உண்டு. இடையில் மினி இட்லி, போர்ட்டீன் இட்லின்னு ஓட்டல்கள்ல அறிமுகப்படுத்தினோம். கிண்ணத்துல சின்ன சின்ன இட்லிகளை போட்டு தள தளன்னு சாம்பார் ஊத்தி கொடுப்போம்.
அந்தக்காலத்துல வேட்டு இட்லின்னு உண்டு. தோசை சைசுல பெருசா இருக்கும். இப்போ அது அருகிப்போச்சு
தவிர குஷ்பு சினி பீல்டுல ஓகோன்னு இருந்தப்ப குஷ்பு இட்லி அறிமுகப்படுத்தினோம். இன்னைக்கும் கோவை, ஈரோடு, திருப்பூர்னு கொங்கு மண்டலத்துல குஷ்பு இட்லி பேமஸ்” என்றார்.
அதோட, “இட்லி பத்தின ரெண்டு ரகசியம் சொல்றேன் கேட்டுக்கோ.. சில சமயங்கள்ல இட்லி மாவு சீக்கிரமே புளிச்சிடும். தவிர மறுநாளுக்கு மாவை வைத்தால் ரொம்ப புளிச்சிடுமோனு பயமா இருக்கும். அப்போ ஒரு வாழை இலையை சின்னதா வெட்டி மாவுல போட்டு வச்சா, மாவு புளிக்காது.
இன்னொரு ரகசியம். இட்லி புசு புசுன்னு சாஃப்டா வரலையேனு பலருக்கு வருத்தம் இருக்கு. இட்லி மாவு அரைக்கும்போது அரசியோட கொஞ்சம் ஜவ்வரிசி இரண்டு கப், ஆமணக்கு விதை பத்து, கொஞ்சம் சோடா உப்பு போட்டு அரைக்கணும். இட்லி புஸ்ஸுன்னு இருக்கிறதோட… மிருதுவாவும் இருக்கும்” என்றார் இட்லி மாஸ்டர் குப்பண்ணன்.
என்னங்க பார்க்கறீங்க.. இட்லி ரகசியம்னு தலைப்பை பார்த்தோண அரசியல் மேட்டர்னு நினைச்சுட்டீங்களா.. நமக்கு எதுக்கு சார் வீண் வேலை.. உருப்படியான தகவல்களை தெரிஞ்சிக்குவோம்.. ஓகேதானே!
ரவுண்ட்ஸ்பாய்