சிட்னி:

ஆஸ்திரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற காட்சியை விளம்பரத்தில் இடம்பெற்றதை கண்டித்து இந்துக்கள் பேரணி நடத்தினர்.

இந்து கடவுளான விநாயகர் உள்பட பல மத கடவுள்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் ஆஸ்திரேலியாவில் வெளியானது. இது இந்துக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த விளம்பரத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள ஏ.எஸ்.பி நிறுவனத்தில் புகார்கள் குவிந்தன. அதன் மீது விசாரணை நடத்திய இந்த நிறுவனம் அந்த விளம்பரத்தை தடை செய்ய மறுத்து விட்டது.

இந்தநிலையில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு உள்ளிட்ட நகரங்களில் இந்துக்கள் சார்பில் கண்டன பேரணி நடந்தது. இதில் திரளான இந்துக்கள் கலந்து கொண்டனர்.