துபாய்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவைக் கொன்றது அவர் கணவர் ஆசிஃப் அலி ஜர்தாரி என பர்வேஸ் முஷாரஃப் குற்றம் சாட்டுகிறார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவியும், இரண்டு முறை பிரதமர் பதவியை வகித்தவருமான பெனாசிர் புட்டோ 2007 ஆம் வருடம் டிசம்பர் 27ஆம் தேதி ஒரு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.  ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த சம்பவம் நடைபெற்றது. அவருடன் மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர். அவர் மரணத்துக்குப் பின் அவர் கணவர் ஆசிஃப் அலி ஜர்தாரி பிரதமராக பதவி ஏற்றார்.

பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப் பெனசிர் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.  தனது உடல்நிலை சரியில்லை எனக் கூறி சென்ற வருடம் துபாய் சென்றவர், தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு பயந்து பாகிஸ்தான் திரும்பாமல் இருக்கிறார். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய பாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெனசிர் கொலைக்கு முழுப் பொறுப்பு அவர் கணவர் ஆசிஃப் அலி ஜர்தாரிக்குத்தான் என பர்வேஸ் முஷாரஃப் கூறி உள்ளார்.  அவர், “எந்தக் கொலை நடந்தாலும் அதனால் பயன் பெறுபவர்தான் முக்கிய குற்றவாளியாக இருப்பார்.  பெனசீர் கொலையில் பெரும் பயன் பெற்றவர் ஆசிஃப் அலி ஜர்தாரிதான்.  ஆனால் அவர் மேல் யாரும் சந்தேகப்படவில்லை.  அது மட்டுமின்றி அவர் ஆட்சி செய்த காலத்தில் இந்த கொலை பற்றிய விசாரணையில் அவர் அக்கரை காட்டவில்லை.

என் மேல் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர வேண்டுமென்றே செய்யவில்லை என குற்றம் சாட்டுபவர்கள் ஏனோ ஆசிஃப் இடம் அது பற்றிக் கேட்கவில்லை.  குண்டு துளைக்காத வாகனத்தில் மேல்பாகத்தில் திறப்பும்,  அதன் மூலமாக அவர் உரையாற்றவும் ஏற்பாடு செய்தது என் தவறல்ல.  ஆசிஃப் தான் அதை செய்துள்ளார். எனவே நான் இந்தக் கொலை ஆசிஃப் தனது ஆட்கள் மூலம் செய்துள்ளார் எனக் கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.