சென்னை:
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழக மக்களுக்கான தான் முதல்வராக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றோர் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், சிஸ்டர் சரியில்லை என்றும் அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
சமீபகாலமாக அரசுக்கு எதிராக தனது கருத்தை தொடர்ந்து கூறி வரும் கமலஹாசன், அரசியலுக்கு வருவேன் என்றும் உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் கேரளா சென்ற கமலஹாசன், முதல்வர் பிரனாயி விஜயனை சந்தித்து அரசியல் குறித்து பேசியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று திடீரென டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்து நடிகர் கமலஹாசனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கமலஹாசனை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தார்.
அதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விரைவில் மக்களை சந்திக்க உள்ளேன் என்றும், தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புவதாகவும் கூறி உள்ளார்.
அவர் கூறியதாவது,
அரசியலுக்குள் வருவது என்பது முட்களின் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. நாட்டில் சமீப காலமாக பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே மக்கள் நினைக்கின்றனர். இந்நிலையில், அவர்கள் இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என ஆராய்வதில் உடன்பாடு கிடையாது.
என்னைப் பொருத்தவரை அரசியலின் நிறம் கருப்பு. அதுவு எனது நிறமும். அந்த நிறத்தில்தான் கருப்பு உள்பட அனைத்து நிறங்களும் உள்ளன.
மேலும் அரசியல் என்பது ஒரு புதை குழி போன்றது என்று அனைவரும் நினைக்கிறார்கள். நாம் அதை மாற்றி புதிய தலைமுறை அரசியவாதிகளை தேடிப்பிடிக்க வேண்டும். அப்போதுதான், அரசியல் என்ற புதைகுழி, வசிப்பட இடமாக மாறும்.
நான் அரசியலுக்கு வருவேன். ஆனால் நான் அரசியல்வாதி ஆவதற்கு முன்பு என்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த சந்திப்புக்கான பயணம் எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்.
நான் அரசியலுக்கு வந்தால் உடனே எந்தவித மாற்றத்தையும் செய்ய முடியாது. அதை நான் உறுதி அளிக்கவும் முடியாது. ஆனால் மாற்றத்திற்கான செயல்முறை தொடங்கி, அதில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
மக்களுக்கு நான் தலைவணங்க தயாராக இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு முதல்வராகவும் விருப்பம் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. ‘
என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன்.
நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஜெ.மறைவுக்கு பிறகு, தமிழக அரசியல் குறித்து நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றோர் அதிரடி கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதன் காரணமாக ஏற்ககனவே குழப்பத்தில் இருக்கும் தமிழர்கள், இவர்களின் அறிவிப்பு காரணமாக மேலும் குழப்பத்திற்கு ஆளாக்கி வருகின்றனர்.