டில்லி

ஐடி மாணவர்களுக்கு நமது புராணங்களில் உள்ள பல விஷயங்களைப் பற்றி பாடம் எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சத்யபால் சிங் கூறி உள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இந்திய பொறியாளர் கவுன்சில் இணைந்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான விஸ்வகர்மா விருதுகளை நேற்று டில்லியில் வழங்கியது.  இந்த விருது வழங்கும் விழாவில் மத்திய அரசில் மனித வளத்துறை அமைச்சராக பணியாற்றும் சத்யபால் சிங் விருதுகள வழங்கி உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “இந்தியாவில் உள்ள அனைத்து எஞ்சினீயரிங் கல்லூரிகளிலும் நமது புராணங்களைப் பற்றி கற்பிக்க வேண்டும்.  நமது புராணத்தில் கூறப்படும் தொழில் நுட்பங்களுக்கு ஈடாக எந்த வெளிநாட்டு கண்டுபிடிப்பும் இல்லை.  ஆகாய விமானத்தை ரைட் சகோதரர்களுக்கு எட்டு மாதம் முன்பே ஷிவாகர் பாபுஜி தால்படே என்னும் இந்தியர் கண்டுபிடித்துள்ளார்.  அது பற்றி எந்த மாணவருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை.

இன்று விஸ்வகர்மாவின் பெயரால் விருதுகள் வழங்கப்படுகின்றன.   ஆனால் அவரைப் பற்றி பொறியியல் கல்லூரியில் சொல்லிக் கொடுப்பதில்லை.  ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம் பற்றியும் யாரும் பாடம் எடுப்பதில்லை.  அவைகள் அனைத்தும்  ஐ ஐ டி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

தற்போது இந்தியா ஆராய்ச்சிகளிலும், புதுக் கண்டுபிடிப்புக்களிலும் பின் தங்கி உள்ளது.  நமது மூதாதையர் பற்றியும் அவர்களுடைய கண்டுபிடிப்புக்கள் பற்றியும் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மேம்படும்” எனக் கூறி உள்ளார்.