பீகார்:

பீகாரில், இன்று திறப்புவிழா நடக்க இருந்த புதிய அணை நேற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக அணையினுள் தேங்கி இருந்த தண்ணீர் வெளியாகி சுற்றுவட்டார பகுதிகளை மூழ்கடித்துள்ளது.

இன்று முதல்வர் நிதிஷ்குமாரால் திறப்பு விழா நடத்தப்பட இருந்த அணை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள பாகல்பூரின்   கஹல்காவன் பகுதியில் அணை கட்டப்பட்டு வந்தது. இந்த அணைக்காக 389 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

இன்று திறப்பு காண இருந்த நிலையில், பீகாலில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அணையின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது.

இந்த அணை  மின்சாரம் தயாரிக்கவும், சுற்றுவட்டார பகுதி விவசாயத்திற்காகவும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். அணை உடைப்பு காரணமாக இன்று நடைபெற இருந்த திறப்பு விழாவும் ரத்து செய்யப்பட்டது.