டில்லி:
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நடிகை கவுதமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது தமிழக்ததிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை நடிகை கவுதமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.
இதுகுறித்து நடிகை கவுதமி கூறியதாவது,
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ‘நீட்’ தேர்வு தமிழகத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புரிதல் மற்றும் அதை செயல்படுத்த கால அவகாசம் தேவை. அதற்காகவே மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து 3 ஆண்டு விலக்கு அளிக்க கோரியுள்ளேன் என்றார்.
எனது மனுவை படித்து பார்த்த அமைச்சர், ‘மனுவில் நீட் தேர்வு விலக்கு பற்றி விரிவாக, விவரமாக கூறி இருக்கிறீர்கள். அதுபற்றி பரிசீலனை செய்து விரைவில் முடிவு எடுப்பதாக கூறினார் என்றார்.
மேலும், தற்கொலை செய்துகொண்ட அனிதா குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவுதமி, அவரை பற்றி பேசவே முடியவில்லை. கவலையாக இருக்கிறது என்றார்.
நான் மாநில அளவில் நுழைவுத்தேர்வு எழுதி என்ஜினீயர் ஆனவள். அதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது என்பதை உணர்ந்துதான் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கிறேன். நீட் தேர்வுக்கு அடுத்த ஆண்டு விலக்கு கிடைக்கும் என நம்புவதாகவும், ஆனால், அதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்க வேண்டும், மாநில அரசு கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் அதற்கு தகுந்தார் போல் ஆசிரியர்களுக்கும் நல்ல பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.