மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சூலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பிரதமர் மோடி முன் வந்ததாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா செய்தி வெளியிட்டுள்ளது.
சிவசேனாவின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் ராவத் எழுதியுள்ள அந்த கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சரத்பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில தலைவர்கள் யாரும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
மாநில தலைவர்கள் பாஜக.வுடன் தொடர்பில் இருப்பதாக சாமனாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை சரத்பவார சந்தித்த போது சுப்ரியா மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று கூறியதாக ராவத் தெரிவித்துள்ளார். அதே நாளில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் புனேயில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியல் சரத்பவாருடன் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் நேற்று சரத்பவார் குறித்து அருண்ஜெட்லி புகழந்து பேசுகையில், ‘‘நான் அவரை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். நாட்டின் நலன் கருதும் விஷயங்களில் சரத்பவார் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக செயல்படுவதை பார்த்திருக்கிறேன். விவசாய துறையில் அவர் போற்றத் தகுந்த பல பணிகளை மேற்கொண்டுள்ளார்’’ என்றார்.
இது குறித்து பாஜக மாநில நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘ தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மோடி ஆட்சியை சிவசேனா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இது மோடிக்கும், அமித்ஷாவக்கும் பிடிக்கவில்லை.
சட்டமன்ற தேர்தலில் ஆரம்பித்த பாஜக.வின் வெற்றி உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடர்ந்தது. ‘‘நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இது போன்ற செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன’’ என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.
‘‘மாநில அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் நினைத்தால் அது சிவசேனாவுக்கு இழப்பு கிடையாது. கூட்டணியில் பல கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்பினால் அது நவீன காங்கிரஸ் கட்சியாக தான் மாறும்’’ என்று அந்த கட்டுரையில் ராவத் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 41 எம்எல்ஏ.க்கள் உள்ளனர்.