மாஃபா பாண்டியராஜன்

லகத்தமிழ் மாநாட்டை நடத்தும், “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின்” பெயரைப் பயன்படுத்தி சிலர் குழப்பம் விளைவிப்பதாக அந்த அமைப்பின் துணைத் தலைவரான கல்வியாளர் பொன்னவைக்கோ தெரிவித்துள்ளார்.

பத்தாவது உலகத்தமிழ் மாநாடு நடத்துவது குறித்து, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும், “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின்” துணைத்தலைவரான கல்வியாளர் பொன்னவைக்கோ தனது ஆதங்கத்தை நம்மிடம் தெரிவித்தார்.

அவர்,  “தவத்திரு தனி நாயகம் அடிகளார், தமிழ்மீது தாம் கொண்ட தீராத காதலால் ஒரு உலகு தழுவிய தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை 1964-ஆம் ஆண்டு தொடங்கினார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இணையதளம்

இந்த மன்றம், சில நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைக்கழகத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்பட இம்மன்றம் தொடங்கப்பட்டது.

உலகிலுள்ள அறிஞர் பலரை ஒன்று சேர்த்து, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவுவதும் வகையில் இரண்டாண்டுகட்கு ஒருமுறை “உலகத் தமிழ் மாநாடு’ நடத்த இம்மன்றம் முடிவு செய்தது. மேலும்,  மாநாடு நடத்தவிரும்பும் நாடுகள் இம்மன்றத்தின் ஒத்துழைப்புடன் மாநாடுகளைச் சிறப்புற நடத்த வழி செய்தது. இம்மன்றத்தின் முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்தப்பெற்றது. அதை அடுத்து, கோலாலம்பூரில் மூன்று மாநாடுகளும், சென்னை, பாரீஸ், யாழ்ப்பாணம், மதுரை மொரீசியஸ்,  தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் என ஒன்பது மாநாடுகள் நடத்தப்பட்டன” என்று குறிப்பிட்டார் பொன்னவைக்கோ.

பொன்னவைக்கோ

மேலும் அவர், “உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது குறித்து தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் ஆலோசனை செய்ததாக  செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் எமது உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பாக இன்று யாரும் அமைச்சரை சந்திக்கவில்லை. எங்களது அமைப்பின் உச்சபட்ச அதிகாரம் கொண்டது செயற்குழு. இந்த செயற்குழுவின் ஒப்புதல் இன்றி, இந்த மன்றத்தில் உறுப்பினரே இல்லாத சிலர் உலகத் தமிழ் மாநாடு குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

மாநாடு குறித்து எங்களது செயற்குழுவும், தற்போதைய தலைவர் மாரிமுத்துவும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போதுதான் உலகத்தமிழ் மாநாடு நடத்த இயலும்.

ஏற்கெனவே, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அப்போதைய எமது தலைவர் கரோசிமாவின் ஒப்புதல் இன்றி மாநாடு நடத்த முயன்றனர். நாங்கள் ஏற்கவில்லை. ஆகவே தமிழ் மாநாடு என்று நடத்த முடியாமல், செம்மொழி மாநாடு என்று நடத்தினர்.  அதுபோலத்தான் இப்போதும் நடத்த வேண்டியிருக்கும்” என்றார் ஆதங்கத்துடன்.

மேலும், “பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை தென்னாப்பிரிக்காவில் நடத்துவதாக ஏற்கெனவே மன்றத்தின் சார்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்கு டர்பனில் உள்ள ஒரு பல்கலையில் நடக்க இருக்கிறது.  உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தென் ஆப்பிரிக்கக் கிளையின் தலைவர் முனைவர் மிக்கி செட்டி நடத்த பொறுப்பேற்றிருக்கிறார். இதை எமது இணைய பக்கத்திலும் தெரிவித்திருக்கிறோம் . ஆனால் சிலர், தமிழகத்தில் பத்தாவது மாநாடு நடத்தப்போவதாக அமைச்சரை சந்தித்திருக்கிறார்கள். இது என்ன நியாயம்” என்று கேள்வி எழுப்பினார்.

அதோடு, “எங்களது அமைப்புக்கு உலகம் முழுதும் கிளைகள் உண்டு. ஆனால் இந்தியாவிலேயே, தமிழகத்திலேயே கிளைகள் இல்லை. ஆனால் அப்படி கிளைகள் இருப்பதாகவும் அதன் பொறுப்பாளர்கள் தாங்கள்தான் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.  அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை சிலர் திசை திருப்ப முயல்கிறார்கள். அவர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்றும் பொன்னவைக்கோ தெரிவித்தார்.