சண்டிகர்
பலாத்கார சாமியார் கைதையொட்டி அரியானா மாநிலத்தில் நடந்த கலவரங்களை நிகழ்த்த ஆசிரம நிர்வாகி ரூ. 5 கோடி கூலி கொடுத்ததாக எழுந்த புகாரின் மேல் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அரியானா மாநிலத்தில் பெரும் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தில் 38 பேர் கொல்லப் பட்டனர். சுமார் 260க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து அரியானா மாநில காவல்துறை இயக்குனர் பி. எஸ். சந்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது :
”கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை கைது செய்து காவல்துறை விசாரித்தது. இந்த விசாரணையில் கலவரத்தை நிகழ்த்த ஆசிரம நிர்வாகிகள் சம்கவுர் சிங் மற்றும் நயின் ஆகியோர் ரூ. 5 கோடி கலவரக்காரர்களுக்கு கொடுத்ததாக தெரிய வந்துள்ளது. அம்பாலா நகரத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் இருந்து ரூ. 38 லட்சம் ரொக்க்கம் கிடைத்துள்ளது. அவர்களிடம் இருந்து மொத்தப் பணமும் யார் யாருக்கு கொடுக்கப்பட்டது என விசாரித்து வருகிறோம்.
புதன்கிழமை முதல் ஆசிரம வளாகத்தை சுற்றி காவல் போடப்பட்டுள்ளது. வெளியே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கான அனுமதியை நாங்கள் அரசிடமும் நீதிமன்றத்திடமும் பெற்றுள்ளோம். வெள்ளிக்கிழமை அன்று நாங்கள் ஆசிரமத்துக்குள் சோதனை நடத்தப் போகிறோம். இந்த சோதனைக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே எஸ் பவாரும் இருக்கிறார். அவர் ஏற்கனவே செவ்வாய் அன்று ஆசிரமத்தின் சுற்றுப்புறங்களை பார்வையிட்டுள்ளார். ராணுவம், மற்றும் வெடிகுண்டு சோதனையாளர்களும் ஆசிரமத்தை சுற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் தற்போது முழுமையான அமைதி நிலவுகிறது. மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரமம் உள்ள சிர்சா நகர் முழுவதும் போலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது“ என தெரிவித்தார்.
ஆசிரமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான விபாசனா, “நாங்கள் அரசின் எந்த சோதனைக்கும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். எங்களின் தற்காப்புக்காக வைத்திருந்த ஒன்றிரண்டு ஆயுதங்களையும் நாங்கள் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டோம். இந்த ஆசிரமத்தில் ஏதும் ஒளிவு மறைவு இல்லை” என கூறி உள்ளார்.
சண்டிகரில் இருந்து 260 கி மீ தூரத்தில் சிர்சா நகரில் அமைந்துள்ள தேரா சச்சா சவுதாவின் ஆசிரமம் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பில் இரு அலுவலகக் கட்டிடங்கள் உள்ளே உள்ளன. அது தவிர உள்ளே விளையாட்டு அரங்கம், மருத்துவமனை, ஒரு உல்லாச விடுதி, கடைகள், மற்றும் ராம் ரஹீம் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கும் பங்களாக்கள் ஆகியவையும் உள்ளன. நூற்றுக்கணக்கான சீடர்கள் உள்ளே இன்னும் தங்கி வருகின்றனர்.