மங்களூரு:
கர்நாடகா மாநிலம் தக்ஷினா கன்னடா எம்பி நளின் குமார் கத்தில் மங்களூரு போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து பாஜ மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில் கண்டன கூட்டம் நடந்தது. இதில் பாஜக.வின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். இதில் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு தொண்டர்களை ஊர்வலமாக செல்லுமாறு தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். இதனால் காத்ரி கோவில் அருகே ஊர்வலமாக சென்ற பாஜக.வினரை போலீசார் கைது செய்தனர்.
பாஜக.வினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய முயற்சித்தனர். இதனால் தொண்டர்கள் எம்.பி நளின் குமாரின் உதவியை நாடினர். இதையடுத்து எம்பி காவல் நிலையத்திற்கு வந்தார். அவர் தனது விரலை வீட்டி இன்ஸ்பெக்டர் மாருதி நாயக்கை மிரட்டியவாறு பேசினார். ‘‘ஏதேனும் ஒரு வழக்கு பதிவு செய்தாலும் நகரத்தை இழுத்து மூடிவிடுவோம்’’ என்று எச்சரித்தார்.