மதுரை,
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஜல்லி போராட்டம்போன்று நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமும் வலுவடைந்து வருகிறது.
நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு பிறகு தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவ, மாணவிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது பள்ளி மாணவ மாணவிகளும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.
இன்று திடீரென்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் திடீரென நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து அங்குள்ள தமிழன்னை சிலை பீடத்தில் ஏறி தமிழன்னை முன்பு நீட் தேர்வில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று முறையிட்டனர். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்த வந்து, தமிழன்னை சிலை பீடத்தின்மீது நின்று போராட்டம் செய்த மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.
அப்போது ஒரு மாணவரும், போலீசாரும் பீடத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதன் காரணமாக சற்று பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களை போலீசார் தரையில் இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். தொடர்ந்து தமுக்கம் மைதானம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.