மும்பை

காராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவரது மகளுக்கு வறியோருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

பா ஜ க ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் படோல்.  இவரது மகள் சுருதி, இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தனது பி எச் டி படிப்பை படிக்க உள்ளார்.  இவருக்கு மகாராஷ்டிரா அரசின் தாழ்த்தப்பட்டோர் நலத் துறை, வறுமையில் உள்ளோருக்கு மேல் படிப்புக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வருடா வருடம் சமூக நீதித்துறையின் சிபாரிசின் பேரில் இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்த உதவித்தொகை, விமானச் செலவு, கல்விக் கட்டணம், மற்றும் தங்கும் செலவுகளுக்காக வசதியற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த நான்காம் தேதி இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியானது.  ஒப்புதல் வழங்கப்பட்ட 35 மாணவர்களில் அமைச்சர் மகளும் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த இரு அரசு அதிகாரிகளின் மகன்களும் உள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அமைச்சர் ராஜ்குமார் படோலுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.  அமைச்சர், ”என் மகள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பித்தது மட்டுமே எனக்குத் தெரியும்.  மற்றபடி நான் தேர்வுக் குழுவில் இல்லை.  எந்த ஒரு சிபாரிசும் என் மகளுக்கு நான் அளிக்கவில்லை.  அவர் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பதே நான் பட்டியல் வெளி வந்த பிறகு அதை பார்த்துத்தான் தெரிந்துக் கொண்டேன்.  அந்த தொகையை பெற்றுக் கொள்வதைப் பற்றி இன்னும் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. முதல்வருக்கு என் மகள் விண்ணப்பித்தது தெரியும்.  ஆனால் அவர் எந்த விளக்கமும் கேட்கவில்லை” எனக் கூறி உள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற மாணவர்களில் தொழில் மற்றும் உயர் கல்வித்துறை உதவிச் செயலரான தயானந்த் மேஷ்ராமின் மகனான சமீர் மேஷ்ராமும், செயலாளரான தினேஷ் வாக்மேரின் மகனான் அந்தரிக்‌ஷ் வாக்மேயும் அடங்குவார்கள்.  சமீர் மேஷ்ராம் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மெகானிகல் எஞ்ஜினீயரிங்க் படிக்கவும், அந்தரிக்‌ஷ் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயிலவும் உதவித் தொகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.