சென்னை,
தமிழக அரசின் கேபிள் டிவி டிஜிட்டல் மயமானதை தொடர்ந்து, அதற்கான செட்டாப் பாக்ஸ் நாளை முதல் விநியோகிக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது!
தனியார் கேபிள் டிவி உரிமையாளர்களின் கொள்ளையை தடுக்கும் விதத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் டிவி சேனல்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்தநிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தெளிவாக பார்க்கும் விதமாக, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தொடங்கும் வகையில் செட்டாப் பாக்ஸ்களை விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த செட்டாப் பாக்ஸ் இலவசமாக, நாளை முதல் தமிழகத்தில் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 125 ரூபாய் கட்டணத்தில் 180 சேனல்கள் பார்க்க முடியும் என்றும், இந்தியாவிலேயே முதன் முறையாக இலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த அறிமுக நிகழ்ச்சியை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 14,66,336 சந்தாதாரர்களைக் கொண்ட 2577 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இந் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.