மும்பை
மும்பையின் புகழ்பெற்ற குடல், இரைப்பை மருத்துவ நிபுணர் காணாமல் போய் 36 மணி நேரத்துக்குப் பின் சடலமாக கண்டறியப்பட்டார்.
மும்பையை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் தீபக் அமராபுர்கர். இவர் குடல் மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வல்லுனர். இவர் கடந்த 29ஆம் தேதி மாலை நோயாளிகளைப் பார்த்து முடித்தபின் மாலை 4.30 மணிக்கு காரில் பிரபாதேவியிலுள்ள தனது வீடு திரும்பி உள்ளார். மும்பை பரேல் பகுதியில் வெள்ள நீர் தேங்கி இருந்ததால் அவருடைய கார் நின்று விட்டது. ஓட்டினரிடம் வண்டியை நீர் வடிந்ததும் வீட்டுக்கு எடுத்து வரச் சொல்லி விட்டு அவர் நடந்து சென்றுள்ளார். மாலை 6.30 மணிக்கு தான் நடந்து வந்துக் கொண்டிருப்பதாக மனைவிக்கு கூறி உள்ளார்.
ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அதைத் தொடர்ந்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 36 மணி நேரத்துக்கு பிறகு ஒர்லியில் உள்ள கப்பற்படை தலைமையகத்துக்கு எதிரில் இருந்த கழிவு நீர் குழாயில் அவர் உடலை கண்டு பிடித்தனர். அவர் பணிபுரிந்த மருத்துவர்கள் அடையாளம் காட்டிய பின் உடல் சயானில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தீபக் திறந்திருந்த மேன் ஹோலினுள் விழுந்ததால் முழுகி மரணம் அடைந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே உண்மைக் காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.