புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது முகநூல் வலைதளத்தில், புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு குடிமகன்கள் மது குடிக்க ரூ.70 வரை செலவு செய்வதாக வேதனை தெரிவித்து உள்ளார்.

புதுவை கவர்னராக கிரண்பேடி பதவி ஏற்றது முதல் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் கிரண்பேடி தனது பேஸ்புக் வலைதளத்தில்  மதுக்குடிப்பவர்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், புதுச்சேரியில் மது குடிப்பவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு  ரூ.70 செலவு செய்கிறார்கள் என்றும்,  மது குடிப்பவர்களை குணமாக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மூலம் மத்திய அரசு ஒருவருக்கு 5000 ரூபாய் வரை செலவளிக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேர ஆய்வின்போது  முள்ளோடை- பரிக்கல் பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளால்மா ணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, அந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்த கிரண்பேடி, அங்கு இருந்த கலால்துறை தாசில்தார் குமரனிடம் பள்ளி- கல்லூரி அருகில் அடுத்தடுத்து மதுக்கடைகள் அமைக்க எப்படி அனுமதி அளித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கும் படியும் கவர்னர் உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பிராந்திகடைகளும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.