கொல்கத்தா

முத்தலாக் குரானில் சொல்லப்படவில்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியதற்கு திருணாமுல் காங்கிரஸ் எம் எல் ஏ சித்திக்குல்லா சவுத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க இஸ்லாமிய அமைப்பான ஜமியத் உலேமா இ ஹிந்த் என்ற அமைப்பின் தலைவர் சித்திக்குல்லா சவுத்ரி.   இவர் திருணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்.  மேற்கு வங்க அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகிப்பவரும் ஆவார்.  உச்சநீதிமன்றத்தின் முத்தலாக் பற்றிய கருத்துக்கு சவுத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறப்படுவதாவது :

”முத்தலாக் முறைக்கு உச்சநீதிமன்றம் தடை சட்டம் கொண்டு வர கோருவது அரசியல் அமைப்புக்கு எதிரானது.  உச்ச நீதி மன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் இஸ்லாமிய உரிமை சட்டத்தை திருத்த எந்த உரிமையும் இல்லை.   அரசியல் அமைப்புக்கு எதிரான உச்ச நீதி மன்ற தீர்ப்பை இஸ்லாமியர்களாகிய நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்.   இது குறித்து எங்களின் அமைப்புகள் டில்லியில் விரைவில் ஒரு விவாதம் நடத்த இருக்கிறோம்.  அதில் ஒரு சரியான முடிவு எடுக்கப்படும்.

நீதிபதிகள் முத்தலாக் பற்றி குரானில் சொல்லப்படவில்லை என்பது தவறானது.  குரானில் உள்ள ஒரு சுராவில் இது பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.   நீதிபதிகள் தீர்ப்பை வழங்கும் முன்பு எங்கள் மத அறிஞர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.  முத்தலாக் குரானில் உள்ளது.  நாங்கள் அதைத்தான் பின் பற்றுவோம்.

முத்தலாக் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம்.   அதே நேரத்தில் அது மதக் கோட்பாட்டுக்கு எதிரானது அல்ல என்பதையும் தெரிவிக்கிறோம்.  இது குறித்து நாங்கள் நாடெங்கும் பல பேரணிகளும், கூட்டங்களும் நடத்த உள்ளோம்.

தஸ்லிமா நஸ்ரின் போன்ற சிலர் இந்த தீர்ப்பை புகழ்ந்துள்ளனர்.  இது அவர்களின் சொந்தக் கருத்தே தவிர ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து இல்லை.   இவர்களுக்கு எல்லாம் இஸ்லாம் மார்க்கத்தையும் அதன் விதிகளையும் பற்றி ஒன்றுமே தெரியாமலே கருத்து சொல்கின்றனர்.  அவ்வளவு ஏன் ஒரு பெரிய அரசியல் கட்சி கூட இது தங்களின் வெற்றி என கொண்டாடி வருகின்றனர்.  இது சரியான நடைமுறை அல்ல” என சவுத்ரி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு  குறித்து திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இது வரை  எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.