நாளை மறுநாள் வினாயக சதுர்த்தியன்று பிள்ளையாருக்கு, வெற்றிலை, பாக்கு, பழவகைகள் ஆகியவையுடன் கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல், மோதகம், எள் உருண்டை போன்ற பொருட்களை நைவேத்யம் செய்வது வழக்கம்.

தற்போது சிலருக்கு இந்தப் பண்டங்கள் எவ்வாறு செய்வது என்பதே தெரியாமல் உள்ளது.  ஆகவே அவற்றின் செய்முறைகளை ஒன்றன் பின் ஒன்றாக தெரிந்துக் கொள்வோம்.

கொழுக்கட்டை

வினாயக சதுர்த்தி என்றாலே நமக்கு நினவுக்கு வருவது கொழுக்கட்டை தான்.  தேங்காய் கொழுக்கட்டை, எள் கொழுக்கட்டை என பல விதங்கள் உண்டு.   அவற்றில் மிகவும் சுலபமான ஒரு கொழுக்கட்டை செய்முறையை இப்போது பார்ப்போம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 2  கிண்ணம்
(வறுத்தது)

எள் – 2 கிண்ணம்
வேர்க்கடலை – 2 கிண்ணம்
பொட்டுக்கடலை – 2 கிண்ணம்
தேங்காய் – 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி – 1  தேக்கரண்டி
வெல்லம் – 100 கிராம்
உப்பு – சிறிது

செய்முறை :

அடுப்பில் வாணலியை சூடாக்கி, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.  பின் வறுத்த அனைத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.  வெல்லத்தையும் பொடியாக்கிக் கொள்ளவும்.  துருவிய தேங்காயை சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.  வறுத்த தேங்காய், வெல்லம், மற்றும் பொடித்து வைத்துள்ள கடலை ஆகியவைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.  இது கொழுக்கட்டையின் உள்ளே வைக்க வேண்டிய பூரணம் ஆகும்.

பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்ந்த வென்னீரை ஊற்றி கட்டியில்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.  சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.  பின் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அந்த மாவை சிறுசிறு கிண்ணங்கள் போல கையால் செய்துக் கொள்ளவும்.   அந்த மாவில் பூரணத்தை வைத்து உடையாதபடி கைகளால் அனைத்து ஓரங்களையும் அழுத்தி ஒட்ட வைக்கவும்.  அப்படி கிண்ணம் போல் செய்யத் தெரியாதவர்கள் ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி, அந்த உருண்டைகளை அப்பளம் போல் கைகளால் தட்டி அதில் பூரணத்தை வைத்து மூடலாம்.  பின்னர் இட்லி தட்டுகளில் அந்த கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.   வினாயகருக்கு நைவேத்யம் செய்ய கொழுக்கட்டை தயார்.